தங்கம் (gold) விலையானது வாரத்தின் முதல் நாளான இன்றே சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்படுகின்றது.
இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் வழக்கம்போல ஏற்றம் காணத் தொடங்கி விடுமா? அடுத்து என்ன செய்யலாம்? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்னென்ன?
டெக்னிக்கல் பேட்டர்ன் எப்படியுள்ளது? ஃபண்டமெண்டல் காரணிகள் என்ன சொல்கிறது? முக்கிய லெவல்கள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.
பாரத் பந்த்: பொதுத்துறை வங்கிகள் 4 நாள் மூடல்.. கிராமங்களில் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் தவிப்பு!
சர்பிரைஸ் கொடுத்த தங்கம்
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கத்தின் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. இதுவே முதலீட்டாளார்களுக்கு பெரும் சர்பிரைஸ் ஆக உள்ளது. இதற்கிடையில் இந்த சரிவானது இப்படியே தொடருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சரிவானது பெரியளவில் இல்லாவிட்டாலும், வாரத்தின் முதல் நாளே இந்த அளவுக்கு சரிந்துள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
சுமூக தீர்வு எட்டப்படுமா?
ஓரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் ரஷ்யா போருக்கு மத்தியில், இன்று இவ்விரு நாடுகளும் மீண்டும் துருக்கியில் பேச்சு வார்த்தையில் ஈடுபடவுள்ளன. ஏராளாமான மக்கள் இப்போரினால் பாதிக்கப்படுள்ள நிலையில், பல ஆயிரம் பேர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. இதற்கிடையில் ரஷ்யாவின் மீது பல அண்டை நாடுகளும் அடுத்தடுத்த தடைகளையும் விதித்து வருகின்றன. இப்படி பல நெருக்கடிகளுக்கும் மத்தியில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையில் ஆவது சுமூக தீர்வு எட்டப்படுமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. அப்படி சுமூக நிலை எட்டப்பட்டால் அது தங்கம் விலையில் அழுத்தத்தினை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
டாலர் மற்றும் பத்திர சந்தை
தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான டாலரின் மதிப்பு வலுவாக காணப்படும் நிலையில் அதுவும், தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனை இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாக பத்திர சந்தையும் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுத்துள்ளன.
ஷாங்காய் லாக்டவுன்
ஒரு புறம் உக்ரைன் போரின் பதற்றத்தின் மத்தியில் தங்கம் விலையில் தாக்கம் உள்ளது எனில், மறுபுறம் சீனாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கமானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் அங்கு பல நகரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 25 மில்லியன் மக்கள் லாக்டவுனால் முடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது மேற்கோண்டு பொருளாதார வளர்ச்சியினை மெதுவாக்கலாம். இதனால் சர்வதேச அளவில் முதன்மை நுகர்வோரான சீனாவில் நிலவி வரும் நெருக்கடி நிலைக்கு மத்தியில், முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்
தொடர்ந்து சர்வதேச சந்தையில் அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலைக்கு மத்தியில், பணவீக்கமானது உச்சம் தொட்டுள்ளது. இந்த போக்கு இனியும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என்றே அஞ்சப்படுகின்றது. இதன் காரணமாக மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்தாலும், அது தற்போதைக்கு தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
நிபுணர்களின் பரிந்துரை
தங்கம் விலையானது சரியும் போதெல்லாம் வாங்கி வைக்கலாம். இன்னும் இதனை தெளிவாக சொல்லவேண்டுமெனில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் பணவீக்கம் என்பது தொடர்ந்து தங்கத்திற்கு ஆதரவாகவே இருக்கும். ஆக பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.
டெக்னிக்கல் என்ன சொல்கிறது?
டெக்னிக்கலாக தங்கத்தின் விலையானது மீடியம் டெர்மில் சரியலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் இன்னும் ஒரு தெளிவில்லாத நிலையே உள்ளது. இது கடந்த வார உச்சமான 1967.20 டாலர்களை உடைத்தால் நிச்சயம் 2000 டாலர்களையும் தாண்டலாம். எனினும் தற்போதைக்கு டாலரின் மதிப்பும் வலுவாக உள்ளது. இன்று நடக்கவிருக்கும் உக்ரைன் -ரஷ்யா பேச்சு வார்த்தைகளை பொறுத்து மாறுபடலாம். ஆக முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கி வைக்கலாம்.
காமெக்ஸ் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 10.60 டாலர்கள் குறைந்து, 1943.60 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும் இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி
தங்கம் விலையினை விட, வெள்ளியின் விலையானது அவுன்ஸூக்கு 1.14% குறைந்து, 25.323 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. இதன் காரணமாக வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம்
இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவிலேயே காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 296 ரூபாய் குறைந்து, 51,580 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் கீழாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையும் உடைத்துள்ளது. இதன் காரணமாக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது பலத்த சரிவிலேயே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 797 ரூபாய் குறைந்து, 68,039 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது இன்னும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம்
சர்வதேச சந்தையின் எதிரொலியாக, ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று சரிவில் காணப்படுகின்றது.
தற்போது சென்னையில் கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து 4826 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 144 ரூபாய் குறைந்து, 38,608 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது கடந்த சனிக்கிழமையன்று சற்று குறைந்திருந்த நிலையில், நேற்று பெரியளவில் மாற்றமில்லை. இன்று மீண்டு சரிவினைக் கண்டுள்ளது.
தூய தங்கம்
சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து, 5265 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 152 ரூபாய் குறைந்து, 42,120 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52, 650 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 40 பைசா குறைந்து 73 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 730 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 73000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவே நீண்டகால நோக்கில் இன்று வெளியாகவிருக்கும் பேச்சு வார்த்தை குறித்தான அறிவிப்புகள் உள்ளிட்ட பல காரணிகளும் தீர்மானிக்கலாம். ஆக சற்று பொறுத்திருந்து வாங்கலாம். ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.
gold price on march 28th, 2022: gold prices down on first day of the week
gold price on march 28th, 2022: gold prices down on first day of the week/தங்கம் கொடுத்த சூப்பர் சர்பிரைஸ்.. முதல் நாளே சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?