புதுடில்லி : தரச்சான்று இல்லாத குக்கர்களை விற்பனை செய்த, ‘பேடிஎம் மால் மற்றும் ஸ்னாப்டீல்’ ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில், ‘இ – காமர்ஸ்’ எனப்படும் இணைய வழி வர்த்தகம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில் வெளியில் செல்ல முடியாததால், இந்த முறையில் ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கத் துவங்கினர்.இந்நிலையில், பேடிஎம் மால் மற்றும் ஸ்னாப்டீல் இ – காமர்ஸ் நிறுவனங்கள், சி.சி.பி.ஏ., எனப்படும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கிடுக்கிப்பிடியில் சிக்கி உள்ளன.
பொதுவாக இணைய வழியில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு தரச் சான்று பெற வேண்டியது கட்டாயமாகும். அப்படி இருந்தும், ஐ.எஸ்.ஐ., முத்திரை இல்லாத குக்கர்களை இந்த இரண்டு நிறுவனங்களும் விற்பனை செய்துள்ளன.இது குறித்து, சி.சி.பி.ஏ., ஆணையத்திற்கு சமீபத்தில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த இரண்டு நிறுவனங்களுக்கும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் மால் இணையதளத்தில் இருந்து குக்கர்களை வாங்கிய 39 வாடிக்கையாளர்களுக்கும், ஸ்னாப்டீலில் இருந்து குக்கர்கள் வாங்கிய 73 வாடிக்கையாளர்களுக்கும் இது குறித்து உடனடியாக தெரிவிக்க, இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு அந்த தொகையை திரும்ப வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement