புதுடெல்லி: தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணையை இந்திய ராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ) நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை ஒடிசா மாநிலம் பலாசோரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து காலை 10.30 மணி அளவில்சோதனை முறையில் ஏவப்பட்டது. இது திட்டமிட்டபடி வான் பகுதியில் தொலைதூரத்தில் இருந்த இலக்கை நேரடியாக தாக்கி அழித்தது” என கூறப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவ்வப்போது, சோதித்துப் பார்ப்பது வழக்கமான செயல்தான் என்றும் டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
– பிடிஐ