முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துபாயை தொடர்ந்து இன்று அபுதாபியில் முதலீட்டாளர்களை சந்தித்து பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துபாயில் இருந்து அபுதாபி சென்றடைந்தார். அங்கு மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், கேரளாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனமான லூலூ நிறுவனத்தினரை இன்று சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய லூலூ நிறுவனம் ஆர்வமாக உள்ளதாகவும் அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்குள்ள தமிழர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் நோபல் குழுமம் சார்பில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எஃகு தொழிற்சாலை அமைக்கவும், ஓய்ட் ஹவுஸ் இண்டெக்ரேடட் தையல் தொழிற்சாலை 500 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கவும், போக்குவரத்துத்துறையில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனைத்தொடர்ந்து நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை முதலமைச்சர் சந்தித்தார். அப்போது, ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் அமைப்பு 500 கோடி ரூபாய் முதலீடு செய்யவும், ஷெராப் குழுமம் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரு ஒப்பந்தங்கள் மூலம் மேலும் 4,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக மொத்தமாக ரூ.2,600 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகள் வாயிலாக தமிழ்நாட்டில் புதிதாக 9,700 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி: ஆஸ்கர் விருது: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் வில் ஸ்மித்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM