புதுடெல்லி: மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் 8.75 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் (மார்ச் 28, 29) நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அகில இந்திய அமைப்புகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
தமிழகத்தில் 50 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 25 கோடி பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
தடையை மீறி வேலைநிறுத்தம் செய்தால், பணிக்கு வராத நாட்களுக்கு சம்பளம், படி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தனியார் பேருந்துகள் முழுமையாக இயங்கும் என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் உட்பட அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களிலும் இன்று வேலை நிறுத்தம் தொடங்கியது. குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. சில இடங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்து நிலையத்தில் பெருமளவில் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். பேருந்துகள் குறைந்த அளவு இயக்கப்படுவதால் ஷேர் ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
சென்னையில் வேலைநிறுத்தம் காரணமாக பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலை நேரப் பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிப்பட்டனர்.
மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் அதில் பயணிக்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் பல இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
இதையடுத்து 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வங்கி சேவை பாதிக்கும் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் இன்றும் நாளையும் வங்கி பணிகள் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
சில மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.