சேலம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இது சுற்றுவட்டாரத்தில் முக்கிய பள்ளி என்பதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் பிளஸ் 2 மாணவன் தலைமுடி வெட்டாமல் பின் பக்கம் கொண்டை முடியுடன் வந்துள்ளான். அவனை தலைமையாசிரியர் அழைத்து கண்டித்துள்ளார். அதற்கு அம்மாணவன், “நான் மட்டும் தான் இப்படி வறேன்னா மத்தவங்கள கேட்க மாட்டுறீங்க” என்று தலைமையாசிரியர் அலுவலகத்தில் சத்தம்போட்டு கத்தியதுடன், டேபிளில் இருந்த கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவற்றை உடைத்துள்ளார். சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள் மாணவனை சமாதானப்படுத்தி பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். பெற்றோரை அழைத்துச் வர சென்ற மாணவன், வரும்போது பீர் பாட்டிலை சட்டையில் மறைத்து வைத்து வந்துள்ளார்.
மாணவன் செய்த செயலைப் பற்றி தலைமையாசிரியர் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டிருக்க, மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து தலைமையாசிரியரை குத்த முயன்றுள்ளார். இதனால் பதறிப்போன தலைமையாசிரியர் சத்தம் போட அருகில் இருந்த சக ஆசிரியர்கள் ஓடிவந்து மாணவனை பிடித்து அவன் கையில் இருந்த பாட்டிலை வாங்கினர்.
பின்னர் பயந்துப்போன தலைமையாசிரியர் தனது அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் பள்ளிக்கு வந்த போலீஸார் மாணவனை சமாதானப்படுத்தி பேசுகையில், `இப்படிபட்ட செயல்களில் ரெளடிகள் தான் ஈடுப்படுவாங்க. நீ படிக்கிற பையன்’ என்று சொல்ல, அதற்கு மாணவன், `நானும் ரெளடி தான் இப்ப என்ன பண்ணனும்’ என்று எதிர்த்து பேசியுள்ளார். இதனால் அறிவுரை கூற வந்த போலீஸாரும் எதுவும் சொல்ல முடியாமல் கண்டித்து விட்டு திரும்பிச் சென்றுள்ளனர்.
தலைமுடியை சரி செய்ய கூறியதற்காக தலைமையாசிரியரை மாணவன் பீர் பாட்டிலால் குத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.