சென்னை அருகில் உள்ள பல்லாவரம் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரியில் தஞ்சையைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். 19 வயதான இவர் டி-பார்ம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் ஜமீன் பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்திருக்கிறார். அந்த அறையில் இவருடன் இரண்டு பெண்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த் நிலையில், அந்த மாணவி திடீரென்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சம்பவம் அறிந்து வந்த பல்லாவரம் பகுதி காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், மாணவி இறப்பதற்கு முன்பாக அவரின் பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், “என்னால் கல்லூரியில் நன்றாகப் படிக்க முடியவில்லை. நீங்கள் பணம் கட்டி என்னைப் படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுகிறீர்கள். அதனால் நான் உங்களை விட்டுச் செல்கிறேன்” என்று மெசேஜ் அனுப்பியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்துத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. படிக்க முடியாத காரணத்தினால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.