புதுடில்லி : இந்த ஆண்டுக்கான, ‘பத்ம விருது’ அறிவிக்கப்பட்டவர்களில் 65 பேருக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விருதுகள் வழங்கி கவுரவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, கலை, பொது சேவை, அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயலாற்றியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு, நான்கு பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. முதற்கட்ட பத்ம விருதுகள் வழங்கும் விழா, 21ம் தேதி நடந்தது.இந்நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்று, 65 பேருக்கு நேற்று பத்ம விருதுகளை வழங்கி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.
இதில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரான, மறைந்த கல்யாண் சிங்கிற்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்ம விபூஷண் விருது, அவரது மகனும் லோக்சபா எம்.பி.,யுமான ராஜ்வீர் சிங்கிடம் வழங்கப்பட்டது. ஹிந்துஸ்தானி பாடகி பிரபா ஆத்ரேவுக்கும், பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.’கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசியை தயாரித்த, ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ண மூர்த்தி எல்லா, அதன் இணை நிறுவனர் சுசித்ரா கிருஷ்ண எல்லா, பழம்பெரும் நடிகர் விக்டர் பானர்ஜி ஆகியோருக்கு ஜனாதிபதி பத்ம பூஷண் விருதுகளை வழங்கினார்
. தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, 90, தவில் இசைக் கலைஞர் கொங்கம்பட்டு முருகைய்யன், டாக்டர் வீராசுவாமி சேஷைய்யா ஆகியோருக்கு, பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்த, ‘மைக்ரோசாப்ட்’ தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, ‘கூகுள்’ தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் நேற்று பங்கேற்கவில்லை.
டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோர் பங்கேற்றனர்.