இந்தூர்: பாஜக தொண்டர்களை தாக்கிய வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஜூலை 17-ம் தேதி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவுக்கு திக்விஜய் சிங் சென்றார். அவருக்கு எதிராக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினர். அப்போது பாஜக தொண்டர்களுக்கும் காங் கிரஸாருக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதி முகேஷ் நாத் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குட்டு உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் தலா ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பின்னர் குற்றவாளிகள் 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து திக்விஜய் சிங் கூறும்போது, “முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் கிடையாது. அரசியல் அழுத்தம் காரணமாக எனது பெயர் சேர்க் கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்” என்றார்.
– பிடிஐ