’புதிய பறவை’ திரைப்படம் 1964 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பும் கப்பலில், கோபாலும், லதாவும் (சிவாஜி – சரோஜாதேவி) சந்திக்க, அரும்புகிறது காதல். கோபாலின் ஊட்டி வீட்டில் அவள், தன் தந்தையுடன் தங்க, விரைவாகச் செல்லும் ரயிலைப் பார்க்கும் போதெல்லாம் கோபால் தன்னிலை மறப்பதை அறிந்த லதா காரணங்கேட்க, அதற்குத் தன் முதல் மனைவி சித்ராவே என்கிறான்.
தான் தாயை இழந்து தனிமையில் வாடி அலைந்தபோது சந்தித்த சித்ராவை, அவள் அண்ணன் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆனால் அவள் குடித்து விட்டு, அவன் பிறந்த நாளில் ஆட்டம் போட்டதால், நற்குடியில் வந்த அவன் தந்தையால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது, இறந்து போகிறார். ஆத்திரப்பட்ட கோபால் அவளை அறைந்து அடிக்க, அவள் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கோபால் கூறி, லதாவைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிடுகிறான்.
எங்கேஜ்மெண்ட் அன்று சித்ரா, (சௌகார்) தன் மாமன் ரங்கனுடன்(எம்.ஆர்.ராதா) வர, அவர்கள் மட்டுமல்லாமல்,நாமும் அதிர்ந்து போகிறோம்.கோபால் தன் மனைவி இறந்து விட்டதாக அழுத்திச் சொல்லி,அதற்கு ஆதாரமாக இறப்புச் சான்றிதழைக்காட்ட,முகம் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்து போனதால்,கோபாலின் கூற்றை உண்மையென்றெண்ணியே அவ்வாறு சான்றிதழ் வழங்கப்பட்டதாகப் போலி சித்ராவும்(சரசா),ரங்கனும் எல்லோரையும் நம்ப வைக்கிறார்கள்.போலீசும் அதனை நம்ப, எங்கேஜ்மெண்ட் நின்று போய் விடுகிறது.
கோபால் எவ்வளவு முயன்றும், அவள் போலி என்பதை நிரூபிக்க முடியாது போக, இறுதியில், தான்தான் கொலைகாரன் என்பதையும்,தான் விரும்பிக் கொலை செய்யவில்லை என்பதையும்,ஆத்திரத்தில்,அவள் இதய நோயாளி என்பது தெரியாமல் அடிக்க,எதிர்பாரா விதமாக அவள் இறந்து விட, ரயில்வே ட்ராக்கில் உடலைப்போட்டு நாடகமாடியதைக் கோபால் ஒத்துக் கொள்கிறான்.அவன் கொலை செய்ததற்குத் தகுந்த ஆதாரமில்லாததால், அவன் வாயாலேயே உண்மையை வரவழைக்கவே சரசாவை வைத்து நாடகமாடியதை அனைவரும் கூற,தன்காதலி லதாவும் காவல்துறை அதிகாரிதான் என்று அறிந்த கோபால் திகைக்க,லதாவோ,முதலில் உண்மையை அறியவே காதலிப்பது போல் நடித்ததாகவும்,நாளடைவில் உண்மையாகவே காதலிக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறுவார். அதோடு நில்லாமல், தண்டனை முடிந்து வரும் வரைக்கும் காத்திருப்பதாகவும் உறுதியளிப்பார்.
தாதா மிராசி இயக்கத்தில், சிவாஜி பில்ம்ஸ் தயாரிப்பில் உருவான இப்படம்,1958 ல் வெளி வந்த பிரிட்டிஷ் படமான‘Chase a crooked shadow’ என்பதன் தமிழாக்கமாகும். மைக்கல் ஆன்டர்சன் இயக்கத்தில் வெளிவந்த ஆங்கிலப்படம் இந்தியாவில் நன்கு ஓட,அதனைத் தழுவி வங்காளப்படம் ‘சேஷ் அங்கா’ (Sesh Anka )வெளியாக, அதனைத் தொடர்ந்தே பண்பாட்டுக்குகந்த சிறு மாற்றங்களுடன்,புதிய பறவை திரையில் சிறகடிக்க ஆரம்பித்தது.
நன்னு திரைக்கதை அமைக்க, ஆரூர் தாஸ் வசனம் எழுத,தாதா மிராசி கோபாலின் தந்தையாக நடித்தார். சௌகார் ஜானகி சரிப்பட மாட்டார் என்று இயக்குனர் கூற, பிடிவாதமாக அவரையே நடிக்க வைத்தாராம் சிவாஜி. படத்திற்கான காஸ்ட்யூம்ஸ் சிங்கப்பூரிலும், லண்டனிலும் ஆர்டர் கொடுத்துத் தைத்து வரப்பட்டனவாம். அவ்வாறு இருந்தும் ‘பார்த்த ஞாபகம்’பாடலுக்கு, அந்த ஆடைகள் ஒத்து வரவில்லையென்று கூறி, தான் ஹாங்காங்கில் வாங்கி வந்த சேலையையே சௌகார் கட்டி நடித்தாராம்.
ஈஸ்ட்மன் கலரில் படம் வெளியானது. தனது சாந்தி திரையரங்கில் வெளியிட சிவாஜி விரும்ப, அப்பொழுது சாந்தியில் ராஜ்கபூரின் ‘சங்கம்’ படம் ஓடிக்கொண்டிருந்ததால், ராஜ்கபூரின் வேண்டுகோளுக்கிணங்க படத்தை வேறு தியேட்டரில் வெளியிட சிவாஜி முடிவெடுத்தாராம். பாரகன் தியேட்டர் புதுபிக்கப்பட்டு, அதில் ரிலீஸ் செய்யப்பட்டதாம். பாரகனில் 100 நாட்களுக்கு மேலும், கிருஷ்ணா, சயானி ஆகிய திரையரங்குகளில் 75 நாட்களுக்கு மேலும் படம் ஓடி வெற்றி வாகை சூடியதாம்.
‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு மட்டும் 250-லிருந்து 300 வாத்தியங்கள், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராம மூர்த்தியால் பயன்படுத்தப்பட்டனவாம். ப்ளூட், ஹார்ப், வயலின், கிளாரினட், மண்டோலின், ட்ரம்பட்ஸ், ட்ரம்போன் என்று பட்டியல் நீள்கிறது. ’சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ’உன்னை ஒன்று கேட்பேன்… உண்மை சொல்ல வேண்டும்’, ’பார்த்த ஞாபகம் இல்லையோ, ’ஆஹா மெல்ல நட’ ஆகிய பாடல்கள் இன்றளவும் நம் செவிகளில் புகுந்து மனதை நிறைப்பவை.
படம் நிறைவடைந்ததும் ஆரூர் தாஸ்,’பெண்மையே நீ வாழ்க!உள்ளமே உனக்கொரு நன்றி!’ என்ற வசனத்தைச் சேர்க்கச் சொல்ல, இயக்குனரும் அவ்வாறே செய்தாராம். ஏனெனில், சிவாஜி ரசிகர்கள் அவர் நெகடிவ் ரோலில் நடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கெளன்று கருதியே அந்த ஏற்பாடாம். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கில், ’சிங்கப்பூர் சிஐடி’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டது.
60 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் புதிய பறவைக்கு என்றுமே மவுசு குறையாது. ’கோப்பால்’ வசனம் மிகவும் பிரபலமாகி உள்ளதே அதற்கு சாட்சி.
–ரெ.ஆத்மநாதன்,கூடுவாஞ்சேரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.