பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சவுதி அரேபியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, 2022 மார்ச் 19 முதல் 21 வரை சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்கள் 2022 மார்ச் 14ஆந் திகதி வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் இலங்கைக்கு மேற்கொண்ட முதலாவது இருதரப்பு விஜயத்தைத் தொடர்ந்து இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அடெல் பின் அஹமட் அல்-ஜுபைருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர், சவுதி அரேபிய இராஜாங்க அமைச்சர் வழங்கிய மதிய உணவு விருந்திலும் கலந்து கொண்டார்.

சவூதி அரேபியாவின் முதலீட்டு அமைச்சர் காலித் ஏ அல்-ஃபாலிஹ் உடனான அவரது சந்திப்பின் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கப்பல் போக்குவரத்து, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், மருந்து மற்றும் ஆடைத் துறைகளில் சவுதி வணிகங்கள் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியன குறித்து ஆராயப்பட்டன. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கை இராஜாங்க அமைச்சர் மேற்படித் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராச்சியத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடனும் சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி நிறுவனமான ஏ.சி.டப்ளிவ்.ஏ. க்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், அதன் தலைவர் மொஹமட் அப்துல்லா அபுனையனை சந்தித்தார். அமெரிக்க மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான லுசிட் குரூப் இன்க். ற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பைசல் சுல்தானை சந்தித்தார். வணிகம், மின்சாரம், சுற்றுச்சூழல், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து, கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பன்முகப்படுத்தப்பட்ட வகையில் கவனம் செலுத்தும் முன்னணி நிறுவனங்களின் குழுவான அஜிலான் பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் இராஜாங்க அமைச்சர் விஜயம் செய்தார். குழுவின் தலைமை நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் அலி அல்ஹாஸ்மியையும் இராஜாங்க அமைச்சர் சந்தித்தார்.

சவுதி இராச்சியத்தில் உள்ள 38 அறைகளின் குடை அமைப்பான சவுதி சபைக் கூட்டமைப்பில் இலங்கையில் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த முக்கிய உரையையும் இராஜாங்க அமைச்சர் பாலசூரிய நிகழ்த்தினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா, மேலதிக செயலாளர் பேராசிரியர் சஜ் யூ. மெண்டிஸ் மற்றும் தூதரக அதிகாரிகள் இராஜாங்க அமைச்சர் பாலசூரியவுடன் சந்திப்புக்களில் கலந்துகொண்டனர்.

இலங்கைத் தூதரகம்,

ரியாத்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.