டெல்லி: புதிய வருமான வரிச்சட்டத்தை கொண்டுவர வேண்டும் என மாநிலங்களவையில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது; பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், நாடு முழுவதும் இன்றும், நாளையும் 48 மணி நேரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன், விலை உயர்வு மற்றும் பொது வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை முன்வைத்தனர். இதற்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், மக்களவையிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் மாலை வரை ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் நிதி மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் தொடங்கியது. அப்போது பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்; புதிய வருமான வரிச்சட்டத்தை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினார். திருத்தத்துக்கு மேல் திருத்தம் என வருமான வரி சட்டம் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சிக்கலான சட்டமாக உள்ளது. தொண்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கும் முறை மிகவும் சிக்கலாக உள்ளது எனவும் கூறினார்.