புதுச்சேரியில் கடந்த 2006ம் ஆண்டிற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் கடந்தாண்டு இருமுறை தேர்தல் தேதி அறிவித்தது.
ஆனால், இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.அதனையொட்டி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்வது குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த 4ம் தேதி விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டு வழக்கை 28 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும், தாமதமின்றி தேர்தலை நடத்திடவும் அறிவுறுத்தினர். இந்நிலையில், புதுச்சேரி அரசு, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் கூறியபடி, பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை நடத்திட விரும்புகிறது.இதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் ஆய்வறிக்கை சமர்ப்பித்த பிறகே உள்ளாட்சி அமைப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டியுள்ளது.
மேலும், வரும் மே முதல் வாரத்தில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. அப்போது தேர்தல் நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.அதனால், இன்றைய வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் முன்னாள் அட்வகேட் ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி, மேற்கூறிய காரணங்களை கூறி கால அவகாசம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையமும் தனது தரப்பு வாதத்தை அறிக்கையாக தாக்கல் செய்து, தேர்தலை நடத்த தயார் நிலையில் இருப்பதை வலியுறுத்த உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா தரப்பில், இடஒதுக்கீடு அளித்து தேர்தலை நடத்த வலியுறுத்த உள்ளது.இதனால், உள்ளாட்சி தேர்தல் உடனே நடைபெறுமா அல்லது தள்ளிப்போகுமா என்பது இன்று தெரிய வரும்.அதேநேரத்தில், பிரதான அரசியல் கட்சிகள், உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.இதற்காக நிர்வாகிகள் கூட்டம் நடத்தி தொண்டர்களை தயார்படுத்தி வருகின்றனர்.
Advertisement