புதுச்சேரியில் என்.ஆர்.காங். – பாஜ கூட்டணி உடைகிறது: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பாஜக முடிவு; மேலிடமும் கிரீன் சிக்னல்

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜ கூட்டணி உடைகிறது. உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனித்து போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் அமைப்பு செயலாளரிடம், எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு மேலிடமும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.புதுச்சேரியில் கடந்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் தொடங்கி பதவி ஏற்பு, அமைச்சரவை இலாகா பங்கீடு, நலத்திட்டங்கள் செயல்படுத்துவது என பலவற்றிலும் பாஜக – என்ஆர் காங்கிரஸ் கூட்டணியில் முரண்பாடு முற்றி வருகிறது. தேர்தலுக்கான இடப்பங்கீட்டின்போதே பாஜ தனது ஸ்டைலில் ஆட்டத்தை துவக்கியது. கூட்டணிக்கான தலைவர் ரங்கசாமிதான் என்பது தெரிந்தும் பாஜக பல இடங்களை அபகரிக்க நினைத்தது. பின்னர் ஒரு வழியாக இடங்களை பிரித்து, தேர்தலை எதிர்கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து பாஜக தனது ஆட்சிதான் அமையப்போகிறது என்ற நினைப்பிலேயே செயல்பட்டது. முதலில் பாஜக எம்எல்ஏவான நமச்சிவாயத்திற்கு துணை முதல்வர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியது. இதற்கு ரங்கசாமி மறுப்பு தெரிவித்ததால் உள்துறை அமைச்சர் பதவியை கேட்டு வாங்கியது. மற்றொரு எம்எல்ஏவான சாய் ஜெ சரவணன்குமாருக்கு குடிமைப்பொருள் வழங்கல் துறை ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் பதவி, ராஜ்யசபா எம்பி பதவி உள்ளிட்டவற்றையும் பாஜக பறித்துக்கொண்டது. இதனிடையே முதல்வர் ரங்கசாமி கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் இருந்தபோது 3 நியமன எம்எல்ஏக்கள் பதவியையும் பாஜக தனது வசமாக்கிக்கொண்டது.மத்தியில் ஆட்சி இருப்பதை சுட்டிக்காட்டி, நிதி வழங்குவது உள்ளிட்ட காரணங்களை கூறி பாஜக தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால் முதல்வர் ரங்கசாமி செய்வதறியாது திகைத்து நின்றார். இருந்தபோதும் அவரும் தனது பாணியில் பாஜவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார். புதுச்சேரியில் உள்ள வாரியங்களின் தலைவர் பதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். பாஜகவுக்கு ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்களான அங்காளன், சிவசங்கர், ஏனாம் எம்எல்ஏ கொல்லப்பள்ளி அசோக் ஆகியோரும் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி கேட்டு பாஜவிடம் நச்சரித்து வருகின்றனர். இந்த விவகாரம் புதுச்சேரியில் பூதாகரமாக வெடித்தது. ஆனால் இது எதையும் முதல்வர் ரங்கசாமி ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை. இதனால் முதல்வர் மீது பாஜ அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவியது.இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த பாஜ தேசிய மகளிரணி கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் சந்ேதாஷ் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு பின்னர் பாஜ அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட்ஸ் ஜான்குமார், சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கர் ஆகியோருடன் அமைப்பு செயலாளர் சந்தோஷ் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர்கள் முதல்வர் ரங்கசாமி மீது சரமாரி புகார் அளித்துள்ளனர்.புதுச்சேரியில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பாஜக எம்எல்ஏக்களை முதல்வர் ரங்கசாமி வேண்டுமென்றே தவிர்த்து வருகிறார். பொது இடங்களில் எங்களின் மதிப்பு குறையும் வகையில் செயல்பட்டு வருகிறார். என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஒரு மாதிரியாகவும், பாஜக எம்எல்ஏக்களை ஒரு மாதிரியாகவும் அணுகுகிறார். பாஜக மீது மக்கள் அதிருப்தி அடையும் வகையில் நடத்துகிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட பிரதமரை சந்திக்கிறார்கள். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இதுவரை பிரதமரை சந்திக்கவில்லை. இதில் இருந்தே அவர் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது உறுதியாகிறது. அவருடன் கூட்டணியை முறித்துக் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும்.இப்பிரச்னையில் நீங்கள் தலையிட்டு உடனடியாக தீர்வு காணவேண்டும் என அமைப்பு செயலாளரிடம் பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதையெல்லாம் கேட்டுக்கொண்ட அமைப்பு செயலாளர் சந்தோஷ், மேலிடத்தில் கூறி உரிய நடவடிக்கை எடுப்போம். உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட அனைத்து ஆயத்த பணிகளில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என கிரீன் சிக்னலும் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.