புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு நேற்று முதல் மீண்டும் விமான போக்குவரத்து துவங்கியது.
சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும், மத்திய அரசின், ‘உதான்’ திட்டத்தின் கீழ், 2017ம் ஆண்டு ஆகஸ்ட்டில், புதுச்சேரியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், ஹைதராபாதுக்கு விமான போக்குவரத்தை துவக்கியது. பின், பெங்களூருக்கு விமான சேவை தொடங்கியது. கொரோனா காலத்தில், விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு நேற்று முதல் மீண்டும் விமான போக்குவரத்து துவங்கியது.மதியம் 12:05 மணிக்கு ஹைதராபாதில் இருந்து புறப்பட்டு, புதுச்சேரி விமான நிலையத்திற்கு 1:30 மணிக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு, இரண்டு தீயணைப்பு வாகனங்கள், ‘வாட்டர் சல்யூட்’ அடித்து வரவேற்றன.
விமானத்தில், பயணியருடன் வந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசையை, முதல்வர் ரங்கசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.கவர்னர் தமிழிசை கூறுகையில், ”புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு, தமிழக அரசின் நிலம் தேவைப்படுகிறது. அதனால், கணக்கு பார்க்காமல் தமிழக அரசு நிலம் கொடுத்தால், புதுச்சேரி விமான நிலையம் விரிவடையும். அது, தமிழகத்தை சார்ந்தவர்களுக்கும் பயன் தரும். எனவே, புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்திற்கு பரந்த மனப்பான்மையுடன் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்,” என்றார்.
Advertisement