பெங்களூரு : தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நோக்கில் தொழிலாளர் நல ஆணையம், ஊக்கத்தொகை வழங்குகிறது. ஆனால் கல்வி நிறுவனங்களின் அலட்சியத்தால், திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் மாதந்தோறும் 21 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான ஊதியம் பெறும் தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒரு மாணவருக்கு மட்டும், தொழிலாளர் நல ஆணையம் கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறது.
அதாவது, 8 – 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு தோறும் 3,000 ரூபாய்; பி.யு.சி., டிப்ளமோ, ஐ.டி.ஐ., – டி.சி.எச்., மாணவர்களுக்கு 4,000 ரூபாய் வழங்குகிறது.மேலும், பட்டப்படிப்புக்கு, 5,000 ரூபாய்; முதுகலை கல்விக்கு 6,000 ரூபாய்; மருத்துவம், பொறியியல் கல்விக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இந்த ஊக்கத்தொகையை பெற பொதுப்பிரிவு மாணவர்கள், 50 சதவீதம், எஸ்.சி., – எஸ்.டி., மாணவர்கள் 45 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதற்கு முன் ஊக்கத்தொகைக்கு, நேரடியாக விண்ணப்பிக்க வாய்ப்பிருந்தது. போலியான சான்றிதழ் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததால், இரண்டு ஆண்டுகளாக ‘ஆன்லைனில்’ விண்ணப்பம் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்.மாணவர்கள் ஊக்கத்தொகை பெற வேண்டுமானால், அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனம், மாணவர்களின் தந்தை அல்லது தாய் பணியாற்றும் தொழிற்சாலை, தொழிலாளர் நலத்துறை நிர்ணயித்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகை கிடைக்காது. ஆனால் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளாததால், மாணவர்களால் ஊக்கத்தொகை பெற முடியவில்லை.கர்நாடகாவில் தொடக்க, உயர்நிலைப்பள்ளி, பி.யு,சி., பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு கல்லுாரி உட்பட, லட்சக்கணக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் வெறும் 5,021 கல்வி நிறுவனங்கள் மட்டுமே, பதிவு செய்து கொண்டுள்ளன. மாநிலத்தில் லட்சக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. வெறும் 19 ஆயிரத்து 746 தொழிற்சாலைகள் மட்டும் பதிவு செய்து கொண்டுள்ளன.
இதன் விளைவாக ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2019 — 21ல், 26 ஆயிரத்து 257 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை 2020 – -21ல், 13 ஆயிரத்து 729; 2021 — 22ல், 10 ஆயிரத்து 745 ஆகவும் குறைந்துள்ளது.தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அக்ரம் பாஷா கூறுகையில், ”பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், மாணவர் ஊக்கத்தொகைக்காக பதிவு செய்யாதது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. கல்வித்துறையில் உள்ள ஸ்டூடன்ட் அச்சீவ்மென்ட் டிராக்கிங் சிஸ்டத்தை பயன்படுத்தி, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.