எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பேரீச்சம்பழம் இறக்குமதிக்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள ஒரு கிலோவுக்கு 200 ரூபா என்ற விசேட வர்த்தக பொருட்கள் வரியில், ஒரு கிலோவிற்கு 1 ரூபா மாத்திரம் அறிவிடும் வகையில் இந்த வரியை 199 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமரினால் ,2022 மார்ச் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 2007 இலக்கம் 48 இன் கீழான விசேட வர்த்தக பொருட்கள் வரி சட்டத்தின் கீழ் 2022 மார்ச் மாதம் 28 ஆம் திகதி இலக்கம் 2273/01 அதிவிசேட வர்த்தமானி மூலம் இதற்கான உத்தரவு பிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்குமதி அனுமதி கட்டுப்பாட்டு நடைமுறையின் கீழ் ,பேரீச்சம்பழம் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னெடுக்கும் பிரச்சாரங்கள் உண்மைக்கு புறம்பானது என்றும், இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.
பேரிச்சம்பழம் இறக்குமதி நடவடிக்கை இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திர நடைமுறைக்கு உட்படுத்தப்படவில்லை என்பதை பொது மக்களுக்கு இதன் மூலம் அறியத்தருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.