புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருதான்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் லீலாவதி(52). இவருக்கு சந்தோஷ்குமார்(26) என்ற மகன் உள்ளார். மதுப்பழக்கத்துக்கு அடிமையான சந்தோஷ்குமார் அடிக்கடி பணம் கேட்டு தாய் லீலாவதியைத் தொந்தரவு செய்துள்ளார். சில நேரங்களில் தாயிடமிருந்து பணத்தைப் பறித்தும் சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 31.8.21 அன்று வீட்டிலிருந்த தாய் லீலாவதியிடம் மது குடிக்கப் பணம் கேட்டுத் தொந்தரவு கொடுத்துள்ளார். தாய் லீலாவதியோ தன்னிடம் பணம் இல்லை என்று பணம் கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த, சந்தோஷ்குமார், “பணம் கொடுக்க மறுக்கும் நீ உயிரோடே இருக்கக்கூடாது” என்று கூறி வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து லீலாவதி உடல் முழுவதும் ஊற்றி தீயைப் பற்ற வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். உடல் முழுவதும் தீ பரவியதால் லீலாவதி அலறித் துடித்திருக்கிறார். அவரின் அலறல் சத்தம்கேட்டு கூடிய அக்கம்பக்கத்தினர், அவரை பலத்த தீ காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால், லீலாவதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
அதையடுத்து, சந்தோஷ்குமாரைக் கைது செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கானது புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று மார்ச் 28-ம் தேதி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அப்துல்காதர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், பெற்ற தாய் என்றும் பாராமல் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொலை செய்த குற்றத்துக்காக, ஒரு ஆயுள் தண்டனையும் (40ஆண்டுகள் சிறை), ரூ.10,000 அபராதமும், அபராதத்தைக் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.
மேலும், குற்றவாளி 40 ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். குறிப்பாக, முதல் 3 மாதங்களுக்குத் தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும். தண்டனை குறைப்போ, எந்த வித சலுகைகளும் வழங்கக்கூடாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.