கொல்கத்தா:
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைத்து விடுத்தன. அதன்படி இன்று போராட்டம் தொடங்கியது.
மத்திய தொழிற்சங்கங்களின் இந்த ‘பாரத் பந்த்’ காரணமாக பல மாநிலங்களில் பகுதி வாரியான பாதிப்பு இருந்தது. வங்கி சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
தொழிற்சங்கங்கள் அதிகம் நிறைந்த மேற்கு வங்காளத்தில் பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவை முடங்கியது.
போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஹவுரா, ஷெல்டா ரெயில் நிலையங்களில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல கேரளாவிலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மாநில அரசு பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. டாக்சிகள், ஆட்டோக்கள் மிக குறைந்த அளவில் இயக்கப்பட்டன. இதனால் அலுவலகம் செல்பவர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளானார்கள். தொழிற்சாலைகள் முற்றிலும் செயல்படாமல் போனது.
இந்த வேலை நிறுத்தம் குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் அம்ரஜித் கவூர் கூறியதாவது:-
ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வேலை நிறுத்தம் காரணமாக நிலக்கரி சுரங்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த அசாம், அரியானா, டெல்லி, மேற்கு வங்காளம், தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் வேலை நிறுத்த போராட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
நாடு முழுவதும் வங்கிகள், இன்சூரன்ஸ் சேவையில் கடும் பாதிப்பு இருந்தது. எக்கு மற்றும் ஆயில் செக்டாரில் பகுதி அளவில் பாதிப்பு இருந்தது.