டெல்லி உச்ச நீதிமன்றத்தில், வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவின் மீது, “மாநில அரசுகள் குறிப்பிட்ட மாநிலத்துக்குள், மத, மொழிவழி சமூகத்தை ‘சிறுபான்மை’ சமூகமாக அறிவிக்கலாம்” என மத்திய அரசு பதில் மனு சமர்ப்பித்துள்ளது.
“ஜம்மு காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், லட்சத்தீவு, மணிப்பூர், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் இந்து மதம், யூத மதம், பஹாய் மதத்தைப் பின்பற்றுபவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்களின் தேசிய மக்கள்தொகை சதவீதத்தின் காரணமாக, சிறுபான்மையினருக்குச் சேர வேண்டிய திட்டங்களின் பலன்கள் கிடைக்காமல் போகின்றன. எனவே மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்” என தனது பொதுநல மனுவில் வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கான பதில் மனுவை மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “சிறுபான்மை சமூகங்களை அடையாளம் காண்பது அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் இருப்பதால், சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கு மத்திய மற்றும் மாநிலங்கள் இரண்டும் சட்டம் இயற்ற அனுமதிக்கும் வகையில், ஒரு சமூகத்தை மொழியியல் அல்லது மத சிறுபான்மையினராக அறிவிக்க மாநிலங்களுக்கும் அதிகாரம் உள்ளது. மதக் குழுக்கள் மற்றும் சமூகங்களை சிறுபான்மையினராக அறிவிக்க முடியுமா என்பதை சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றம் பரிசீலிக்க வேண்டும். இந்தியா மிகவும் தனித்துவமான பண்புகளைக் கொண்ட நாடு. மத மற்றும் மொழியியல் சிறுபான்மையினர், நாடு முழுவதும் பரவி உள்ளனர். ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு மதக் குழு மற்றொரு மாநிலத்தில் சிறுபான்மையினராக இருக்கலாம்” என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் இந்த பதில் மனுவில், “மகாராஷ்டிரா அரசு யூதர்களை மாநிலத்திற்குள் சிறுபான்மை சமூகமாக அறிவித்துள்ளது. கர்நாடக அரசு உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி, துளு, லமணி (லம்பாடி), இந்தி, கொங்கனி மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளை மாநிலத்திற்குள் சிறுபான்மை மொழிகளாக அறிவித்து உள்ளது” என மத்திய அரசு மேற்கோள் கட்டியிருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம், இந்திய அளவில் பெரும்பான்மையாக உள்ள மதத்தை சேர்ந்தவர்கள், மாநிலங்களில் சிறுபான்மையினராக இருப்பின், அவர்களையும் மாநில அரசுகள் சிறுபான்மையினராக அறிவிக்க முடியும் என்று கூறுகின்றனர்.