இந்த ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஆஸ்கார் விருதுகளுக்காக பேசப்பட்ட அளவுக்கு, மனைவியை கிண்டல் செய்த கிரிஸ் ராக்கை மேடை ஏறி வில்ஸ்மித் பளார் அறைக்காக பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது. மனைவியைப் பற்றி ஜோக் அடித்த கிரிஸ் ராக்கை ஆஸ்கார் மேடையிலேயே அறைந்த வில் ஸ்மித்தான் ரியல் ஹீரோ, அரசியல் தலைவர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற வில் ஸ்மித், தனது மனைவியை கிண்டல் செய்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை ஆஸ்கார் மேடை ஏறி பளார் என அறைந்த சம்பவம் பரவலாக உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து பேசப்பட்டு வருகிறது.
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்துக்கு கிங் ரிச்சர்ட் என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்குவதற்கு முன்பு, நடந்த இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் பேசப்படுகிறது.
ஆஸ்கார் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியின்போது, ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் மனைவி ஜடா பிங்கெட்டை நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். ஜி.ஐ ஜேன் 2. படத்தில் கதாநாயகி தனது தலையை மொட்டையடித்தபடி நடித்திருந்த கதாபாத்திரத்துடன் ஜடாவை ஒப்பிட்டு கிறிஸ் ராக் கிண்டல் செய்து பேசினார். இதனால், பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. இது வில் ஸ்மித்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
வில் ஸ்மித் தனது மனைவியை உருவகேலி செய்து பேசியதால் கோபமடைந்த வில் ஸ்மித், திடீரென்று ஆஸ்கார் விழா மேடைக்கு ஏறி, கிறிஸ் ராக்கை பளார் என ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இதனால், கிறிஸ் ராக்கை நிலை குலைந்து போனார். அதற்கு பிறகு, தனது இடத்திற்கு வந்து அமர்ந்த வில் ஸ்மித், தகாதா வார்த்தையைப் பயன்படுத்தி உனது வாயால் எனது மனைவியைப் பற்றி எதுவும் பேசக்கூடாது என்று கூறினார்.
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட், அலோபீசியா என்னும் நோயினால் முடியை இழந்து வருகிறார். அதனால், அவர் மொட்டை அடித்துள்ளார். ஜடா பிங்கெட்டின் மொட்டைத் தலையைக் குறித்து உருவ கேலி செய்த கிறிஸ் ராக்கைத்தான் வில் ஸ்மித் ஆஸ்கார் மேடையிலேயே வெளுத்திருக்கிறார்.
ஆஸ்கார் விழாவின் போது பதிவான வீடியோ காட்சி இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது மனைவியைப் பற்றி உருவ கேலி செய்த நடிகர் கிறிஸ் ராக்கை ஆஸ்கார் மேடை ஏறி அறைந்த வில் ஸ்மித்தை அரசியல் தலைவர்கள் முதல் எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலரும் இவர்தன் ரியல் ஹீரோ பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பலரும் மேடைகளில் நிகழ்சிகளில் பேசும்போது, நகைச்சுவை என்ற பெயரில் உருவகேலி செய்து பேசுவதும் அதைக் கேட்டு மற்றவர்கள் சிரிப்பது என்பதும் நடந்து வருகிறது. அத்தகைய நிகழ்வுகளுக்கும் அப்படிப்பட்டவர்களுக்கும் வில் ஸ்மித், கிறிஸ் ராக்குக்கு விட்ட அறையின் மூலம் பதிலளித்திருக்கிறார்.
வில் ஸ்மித்தின் மனைவியைப் பற்றி உருவ கேலி செய்த நடிகர் கிறிஸ் ராக்கை ஆஸ்கார் மேடையிலேயே அறைந்த வில் ஸ்மித்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சபாஷ் சரியான தண்டனை உண்மையான கதாநாயகன் என்று பாராட்டியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “சபாஷ்…. சரியான தண்டனை!
ஹாலிவுட் டால்பி திரையரங்கத்தில் இந்திய நேரப்படி இன்று காலை அகாடமி விருது (ஆஸ்கர் விருது) வழங்கும் விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை வழங்குவதற்காக கிரிஸ் ராக் என்ற நகைச்சுவை நடிகர் மேடையேறினார்.
அப்போது நகைச்சுவை செய்வதாக நினைத்துக் கொண்டு, நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட்டின் தலைமுடி பிரச்சினையை கிண்டல் செய்தார். ஜடாவுக்கு alopecia என்ற முடி உதிரும் நோய் இருக்கிறது. கிரிஸ்ராக்கின் நகைச்சுவைக்கு பெரிய வரவேற்பு இல்லை. வில்ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படுவதால் அதை வாங்குவதற்காக வந்திருந்தார். கிரிஸ் ராக்கின் நகைச்சுவையைக் கேட்டு வில்ஸ்மித் ஆரம்பத்தில் சிறிது சிரித்தார். ஆனால், அருகிலிருந்து அவரது மனைவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதைப் பார்த்து கொதித்துப் போனார்.
உடனடியாக மேடையில் ஏறிய வில் ஸ்மித் கிரிஸ்ராக்கின் கன்னத்தில் பளார் என அறைந்திருக்கிறார். அவை நாகரிகத்தையெல்லாம் விடுங்கள். வில் ஸ்மித்தின் செயல் மிகவும் சரியானது. கிரிஸ்ராக்கின் செயலுக்கு உடனடியாக சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல…. ஜடாவை தாம் கிண்டல் செய்ததில் உள்நோக்கமில்லை என்று கிரிஸ்ராக் விளக்கமளித்த போது அதை ஸ்மித் ரசிக்கவில்லை. அப்போதும் கூட என் மனைவியின் பெயரை உச்சரிக்கக்கூட உனக்குத் தகுதியில்லை என்று பொங்கியிருக்கிறார்.
அவர் உண்மையான கதாநாயகன்.
இந்த நிகழ்வு சொல்லியிருப்பது இரண்டு உண்மைகளை…
- ஒருவரின் ஊனத்தை,(body shaming) குறையை நகைச்சுவைக்கான கருப்பொருளாக்காதீர்கள்.
- மனைவியையும், அவரது உணர்வையும் மதித்தால் உலகம் உங்களை மதிக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.
வில் ஸ்மித்தின் செயலை இயக்குனர், எழுத்தாளர், சித்த மருத்துவர் கவிஞர் குட்டி ரேவதி தனது முகநூல் பக்கத்தில், உண்மையான காதலும் அழகான ஆண்மையும் என்று பாராட்டியுள்ளார்.
எழுத்தாளர் பாட்டுக்கோட்டை பிரபாகரும் வில் ஸ்மித்தின் செயலைப் பாராட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “ஆஸ்கார் விருது விழாவில் வில்ஸ் ஸ்மித் தன் மனைவியை உருவ கேலி செய்த நடிகரை மேடையேறி அறைந்தது இன்று பரபரப்பான உலகச் செய்தி.
எதிர்வினை கண்டிப்பாக இருக்காது, சபை நாகரிகம் பார்ப்பார்கள், கடுப்பானால்கூட பிறகு பேட்டியில் சொல்வார்களே ஒழிய அப்போது ரியாக்ட் செய்ய மாட்டார்கள்..இப்படியான நம்பிக்கையில்தான் சிலர் மேடைகளில் வரம்பு மீறி பேசுகிறார்கள்.
நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு தனி மனித தாக்குதலோ அல்லது உருவ கேலியோ சுலபமாக செய்கிறார்கள். கலாய்த்தல் என்பதற்கு எல்லை இருக்கிறது. கலாய்க்கப்படுபவரும் ரசிக்கும்படி இருந்தால்தான் அது நாகரிகமான நகைச்சுவை. எல்லை மீறிய கலாய்த்தல்களை சில ரியாலிட்டி ஷோக்களில் பார்க்கும்போது நமக்கே கோபம் துடிக்கும்.
ஒரு பெண்ணை.. அதுவும் இன்னொருவர் மனைவியை பொதுவெளியில் நகைச்சுவை என்கிற பெயரில் கமெண்ட் அடித்தால் மானமுள்ள எந்தக் கணவனுக்கும் ரோஷம் வரும். ஆனால் எத்தனை பேருக்கு அதே மேடையில் அந்தக் கோபத்தை வெளிப்படுத்தத் தோன்றும்? உலகம் முழுதும் தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்று திட்டமிட்டு ஒருவர் இதைச் செய்ய முடியாது. இயல்பாக அந்த நிமிடம் தோன்றிய எதிர்வினைதான் இது.
இதில் கோபத்தைவிடவும் அவர் தன் மனைவியின் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பும், மதிப்பும்தான் கூடுதலாக வெளிப்படுகிறது.
பலருக்கு மத்தியில் தன் மனைவியை மட்டம் தட்டி ஜோக் அடிக்கும் அத்தனை கணவர்களுக்கும் ஒரு அறையால் பாடம் எடுத்திருக்கிறார். பொதுவெளியில் எப்படிப் பேசக் கூடாது என்பதை அத்தனைப் பேச்சாளர்களுக்கும் ஒரு அறையால் புத்தி புகட்டியிருக்கிறார்.
இந்த அறையின் எதிரொலிகளை விரைவில் உலகம் முழுதும் வேறு பல மேடைகளிலும் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.” என்று எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“