மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் 28, 29-ம் தேதிகளில்(நாளை மற்றும் நாளை மறுநாள்) நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பில் ஐஎன்டியுசி, சிஐடியு,ஏஐடியுசி, ஏஐசிசிடியு, எச்எம்எஸ்உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த சங்கங்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களான வங்கி, எல்.ஐ.சி. உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இந்தியா முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்கள் என சுமார் 25 கோடி பேர் பங்கேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள், அரசு ஊழியர்கள் என ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்பதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கக் கூடும் என்பதால் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நோ ஒர்க் நோ பே’ என்ற அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன.
தமிழக அரசு ஊழியர்கள் அந்த 2 நாட்கள் பணிக்கு வராவிட்டால் அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்து இருக்கிறார்.
அனைத்து மாவட்டங்களிலும் தடையின்றி ரயில், பேருந்து போக்குவரத்து நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதையடுத்து பேருந்து பணிமனைகள், முக்கிய பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. கோயம்பேடு போன்ற மாவட்ட தலைநகர பேருந்து நிலையங்களில் இருந்துபுறப்படும் பேருந்துகள் இடையூறின்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய அரசு அலுவலகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள். பணிக்கு வரும் ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும். மறியல் செய்து பணிக்கு வருபவர்களுக்கு தொந்தரவு தரும் நபர்கள் மீது கைது உட்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றனர்.