சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களின் மாதிரிகளை தேர்வு செய்ய புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த நடப்பாண்டில் ரூ.9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 13 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் உள்ளிட்ட 24 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் குறிப்பிட்ட மாதிரிகளில் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால், மாற்றுத் திறனாளிகள் குறிப்பிட்ட மாதிரியைத்தான் பெற வேண்டிய நிலை உள்ளது. இவற்றுக்கு மாற்றாக, மாற்றுத் திறனாளிகள் மாதிரிகளை தேர்வு செய்ய புதிய திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில், தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் உபகரணங்களின் மாதிரிகளுக்கும் மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் ஆகிய 5 வகையான உபகரணங்களை மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தாங்கள் விரும்பிய உபகரணங்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.9.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யும் மாதிரி உபகரணத்துக்கு, அரசு நிர்ணயித்த மானியத் தொகையைவிட அதிகமாக தேவைப்படும் கூடுதல் தொகையை அவர்களின் பங்களிப்புத் தொகையாக அவர்களோ அல்லது நன்கொடையாளரோ அல்லது கொடை நிறுவனம் மூலமாகவோ வழங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 554 பேர் இத்திட்டத்தில் தங்களது பங்குத் தொகையாக ரூ.6.27 லட்சம் செலுத்தியுள்ளனர். இவற்றுடன் சேர்த்து, நடப்பாண்டு ரூ.70.08 கோடி செலவில் 24 வகையான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும்” என்றனர்.