சென்னை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் துபாய் பயணத்துக்கு விமானம் கிடைக்காததால், தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த தனி விமானத்துக்கான செலவை திமுக-தான் ஏற்றுள்ளது. தமிழக அரசின் நிதி செலவழிக்கப்படவில்லை. முதல்வர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். முதல்வரின் இந்த பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டும் இல்லை. கடைக்கோடி தமிழகத்திலிருந்து வெளிநாட்டுக்கு வந்து உழைக்கும் ஒவ்வொரு குடும்பத்தினுடைய வளத்துக்காகவும்தான்.
உலக வர்த்தகப் பொருட்காட்சி முடியும்போதுதான் மிகப் பெரிய கூட்டம் வந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் உலகின் பல பகுதியிலிருந்தும் ஏராளமானோர் வந்துள்ளனர். இந்த நேரத்தில் அரங்கைத் திறப்பதுதான் சரியாக இருக்கும் என்பதை முதல்வர் உணர்ந்து தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார். பழனிசாமி முதல்வராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. ஆனால், தற்போது இந்த 3 நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ ரூ.6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து வெற்றிகரமான பயணத்தை முதல்வர் மேற்கொண்டுள்ளார்.
விருதுநகர் பாலியல் வழக்கு குறித்து முதல்வர் சட்டப்பேரவையில் தெளிவாக விளக்கமளித்து உள்ளார். இந்த வழக்கில் சிபிசிஐடி தனி அதிகாரியை நியமித்து முழுமையாக முடிப்பதற்கும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி 60 நாட்களுக்குள்ளாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத் தந்து, இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் என்று முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, இவ்வழக்கு குறித்து பழனிசாமி தேவையில்லாத கருத்துக்களைக் கூறுகிறார். முதல்வருக்குக் கிடைக்கும் புகழையும், வரவேற்பையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் இத்தகைய புழுதிகளை பழனிசாமி இறைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.