கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் பள்ளிக் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர அந்த மாநில அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, கர்நாடகாவில் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம்கள் கடைகள் போடுவதற்குத் தடை, மதரஸாக்களைத் தடை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேசிவருவது என இந்து – முஸ்லிம் மோதல் போக்கு நாளுக்கு நாள் மாநிலத்தில் தீவிரமடைந்து வருவதாக பலரும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.எச்.விஸ்வநாத் பா.ஜ.க-வினருக்கு அறிவுரை வழங்கும் விதமாகப் பேசியிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “கர்நாடகாவில் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் விற்பனையாளர்கள் வியாபாரம் செய்யத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு ஏன் மௌனமாக இருக்கிறது? முஸ்லிம்களை நாம் நடத்தும் விதத்தில் மற்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் இந்துக்களை நடத்த ஆரம்பித்தால் அரசாங்கம் என்ன செய்யும்?
மத அரசியலில் ஈடுபடுவது மிகவும் ஆபத்தானது. தேர்தலில் வெற்றி பெற மதத்தைப் பயன்படுத்தக் கூடாது. இதன் அடிப்படையில் எத்தனை தேர்தல்களில் வெற்றி பெறுவீர்கள்? பிரதமர் நரேந்திர மோடி `சப் கா விகாஸ் பிர் விஸ்வாஸ்’ என்ற செய்தியை வழங்கியுள்ளார். ஆனால், நமது மாநிலம் தவறான பாதையில் செல்கிறது.
கோயில்களுக்கு அருகில் பூ, பழங்கள், பூஜை பொருள்களை விற்கும் முஸ்லிம்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இனி எப்படிச் சம்பாதிக்கப் போகிறார்கள்? அவர்களைத் தடுப்பது தீண்டாமைக்குச் சமம்” எனப்பேசியுள்ளார்.