மிச்சோவாகன்,
மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல், எரிபொருள் திருடுவது உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த போதை பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதி கொள்வதும் உண்டு.
சட்டவிரோத போதை பொருள் கடத்தல் கும்பல் மோதலால் கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை, 3.4 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இவற்றில் பலர் குற்றவாளிகளாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு இடையேயான சண்டையில் கொல்லப்பட்டவர்கள் எனவும் அரசு தகவல் தெரிவிக்கிறது.
இந்த மாத தொடக்கத்தில் மத்திய மெக்சிகோவில் அமைதியான நகரான அட்லிக்ஸ்கோ பகுதியில் மர்ம நபர்களால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பெண்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மாதத்தில் கும்பலுக்கு இடையேயான மோதல் என நம்பப்படுகிற சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மத்திய மெக்சிகோவில் அதிகாலை 4.30 மணியளவில் அதிகாரிகளுக்கு வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு அவர்கள் சென்றுள்ளனர்.
அந்த பகுதியில் அடிக்கடி, சேவல் சண்டைக்காக சட்டவிரோத சூதாட்டம் நடத்தப்படும். அந்த இடத்தில் துப்பாக்கி சூடு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 16 ஆண்கள் என மொத்தம் 19 பேரின் உயிரற்ற உடல்கள் கிடந்துள்ளன.
இவர்கள் தவிர, பலர் காயமடைந்து உள்ளனர். அவர்களை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி மிச்சோவாகன் பகுதி பொது பாதுகாப்பு செயலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளனர். இந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் பற்றிய எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.