பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
இந்த போராட்டத்தையொட்டி மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் ரயில் நிலையத்தில் இடதுசாரி தொழிற்சங்க உறுப்பினர்கள்
தண்டவாளங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ரயில்சேவைகள் பாதிக்கப்பட்டன.
இடதுசாரிக் கூட்டணி ஆளும் கேரளாவில் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும் பால், மருத்தகம் உள்ளிட்ட அவசர சேவைகள் மட்டும் வேலை நிறுத்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.