கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்ததால் ஆளும் திரிணாமுல் மற்றும் பாஜ எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அவை விதிமுறை மீறியதால் எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து உட்பட 5 பாஜ எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் 8 பேர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிரொலித்தது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சியான பாஜ கோரிக்கை விடுத்தது. இதற்கு திரிணாமுல் எம்எல்ஏக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதன் காரணமாக திரிணாமுல் மற்றும் பாஜ எம்எம்ஏக்கள் திடீரென மோதலில் ஈடுபட்டனர். அவை பாதுகாவலர்களும், பிற எம்எல்ஏக்களும் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இந்த மோதலைத் தொடர்ந்து பாஜ எதிர்கட்சி தலைவர் சுவேந்து தலைமையில் 25 பாஜ எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதே சமயம், அவை விதிமுறை மீறியதால் சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜ எம்எல்ஏக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பிர்பூமில் 8 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக, மேற்கு வங்க ஆளுநர் தன்கர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்து விளக்கம் அளித்தார்.