லக்னோ: உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஏராளமான கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிரிமினல்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து உ.பி.யில் கிரிமினல்கள் ஆதிக்கம் குறைந்து சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக பிரச்சாரம் செய்தது. தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகி உள்ளார். பாஜகவின் வெற்றிக்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு மாநிலத்தில் அமைதி நிலவுவதும் ஒரு காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த 15 நாளில் 50 கிரிமினல்கள் என்கவுன்ட்டருக்கு பயந்து சரணடைந்துள்ளனர். கோண்டா மாவட்டத்தில் ஆள் கடத்தல் மற்றும் பணம் பறித்தலில் ஈடுபட்ட கவுதம் சிங் என்ற கிரிமினல் ‘என்னை சுடாதீர்கள், நான் சரணடைகிறேன்’ என்று எழுதப்பட்ட பதாகையை கழுத்தில் கட்டிக் கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். கடந்த 15 நாட்களில் மட்டும் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் சுமார் 50 கிரிமினல்கள் சரணடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், கடந்த 15 நாட்களில் 2 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர் என்றும் 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் பிரஷாந்த் குமார் கூறினார்.