ராமநாதபுரம் நகராட்சியின் முதல் நகர்மன்ற கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆணையர் சந்திரா, துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட தலைநகராக விளங்கி வரும் ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது, நகர எல்லையை விரிவுபடுத்துவது, அரசுடன் இணைந்து நகர வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர அனைத்து உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், கோடை காலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர். அப்போது பேசிய 5-வது வார்டு கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் (காங்கிரஸ்), “அள்ளிக் கண்மாயில் 40 ஆண்டுகளாக குடியிருந்து வந்த பொதுமக்களை ஆக்கிரமிப்பு காரணமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி பட்டினங்காத்தான் ஊராட்சியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் குடிநீர் வசதி இல்லை என என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். எனவே அங்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
அதற்கு நகர்மன்றத் தலைவர் கார்மேகம், “அந்த குடியிருப்பு ஊராட்சியில் உள்ளது. நமது நகராட்சி சார்பாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாது, மாவட்ட கலெக்டரிடம் நகர்மன்றத்தின் சார்பாக இதுகுறித்து வலியுறுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
ஆனால் கவுன்சிலர் ராஜாராம், “எனக்கு ஓட்டு போட்ட மக்கள் தற்போது அங்கு வசிக்கிறார்கள். அவர்கள் என்னிடம் நீங்கள் நல்லது செய்வீர்கள் என்றுதான் உங்களுக்கு ஓட்டு போட்டோம் எங்களுக்கு எப்படியாவது குடிநீர் வசதி ஏற்பாடு செய்து தாருங்கள் என மன்றாடுகிறார்கள். எனவே நகராட்சி அவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மீண்டும் தெரிவித்தார்.
அப்போது இடையே குறுக்கிட்டு பேசிய 10-வது வார்டு கவுன்சிலர் காளிதாஸ் (தி.மு.க), “எனக்கு ஓட்டுப் போட்டவர்கள் தற்போது ராமேஸ்வரத்தில் குடிபெயர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ராமநாதபுரம் நகராட்சி சார்பில் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என கேட்க முடியுமா?” என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது நகர்மன்றத் துணைத் தலைவர் பிரவீன் தங்கம் எழுந்து, “அவர் கேட்கும் கேள்விகளுக்கு நகர்மன்றத் தலைவர் பதில் சொல்லுவார். நீ பதில் சொல்லக்கூடாது… உனக்கு உரிமை கிடையாது, கீழே உட்காரு” என காளிதாசை ஒருமையில் பேசினார். அதற்கு காளிதாஸ், “உனக்கும் உரிமை கிடையாது நான் தலைவரிடம் பேசுகிறேன். நீ உட்காரு” என பதிலுக்கு ஒருமையில் பேசினார். இருவரும் மாறி மாறி திட்டிக்கொண்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நகர்மன்றத் தலைவர், “இருவரும் அமருங்கள்… அவருக்கு நான் பதில் சொல்கிறேன்” எனக் கூறிவிட்டு, “ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள மக்களுக்கே குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லை. ஆனால் உங்கள் கோரிக்கை குறித்து நகராட்சியில் பரிசீலனை செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.