சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் தொலைக்காட்சி மற்றும் இணைய சேவைகளை கேபிள்கள் மூலம் வழங்கும் நிறுவனங்கள் ரூ.30 கோடிக்கு மேல் மாநகராட்சிக்கு வாடகை நிலுவை வைத்துள்ளன. இந்நிலையில் வாடகை செலுத்தாத நிறுவனங்களின் 136 கிமீ நீள கேபிள்களை மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் துண்டித்து அகற்றியது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 27 தனியார் நிறுவனங்களின் இணைய சேவை வழங்கும் கண்ணாடி இழை கேபிள்கள் (OFC) மற்றும் தொலைக்காட்சி சேவை வழங்கும் கேபிள்கள் சுமார் 5 ஆயிரம் கிமீ நீளத்துக்கு மேல் உரிய அனுமதி பெற்று பதிக்கப்பட்டும், கம்பங்கள் வழியாகவும் செல்கின்றன. கேபிள் வாடகை மூலமாக மாநகராட்சிக்கு ஆண்டு தோறும் சுமார் ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிறுவனங்களில் பல, பெற்ற அனுமதியை விட அதிகமான நீளத்துக்கு கேபிள்களை நிறுவி இருப்பதாகவும், மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாமல் ரூ.30 கோடிக்கு மேல் நிலுவை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தது. கடந்த 2019-ம் ஆண்டே ரூ.74 கோடிக்கு மேல் நிலுவை தொகை வசூலிக்க வேண்டி இருந்தது. இந்நிறுவனங்கள் இதுநாள் வரை உயர்மட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி, வாடகையையும் செலுத்தாமல், நடவடிக்கையும் எடுக்கவிடாமல் பார்த்துக்கொண்டன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசு இ-சேவை மையங்கள் உள்ளிட்டவை இணைய சேவையை அடிப்படையாக கொண்டு செயல்படுவதால், வாடகை செலுத்தாத நிறுவனங்களின் கேபிள்களை மாநகராட்சி துண்டிக்கும் பட்சத்தில் நிறுவனங்களின் சேவைகள், மக்களுக்கான சேவைகள் அனைத்தும் பாதிக்கும் என வாடகை செலுத்தாத நிறுவனங்கள் கூறி வந்தன.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் வாடகை நிலுவை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகமும் கடும் நடவடிக்கைகளை எடுக்காமல், வாடகைத் தொகையை செலுத்துமாறு கோரி வந்தது. இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம், தொடர்புடைய நிறுவனங்கள் அமைத்துள்ள கேபிள்களின் நீளம், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட வாடகை, மொத்தம் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய், இதுவரை செலுத்தப்பட்ட தொகை, எவ்வளவு நீளத்துக்கு கேபிள்களை நிறுவ அனுமதி பெற்றுள்ளன, எவ்வளவு நீளத்துக்கு அனுமதி பெறாமல் கேபிள்களை நிறுவியுள்ளன, நிலத்துக்கடியில் எத்தனை கிமீ நீளத்துக்கு கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன, மாநகராட்சி தெருவிளக்கு கம்பங்கள், தொடர்புடைய நிறுவனங்களின் கம்பங்கள் வழியாக எத்தனை கிமீ நீளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டிருந்தார்.
மதிப்பீடு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அனுமதி பெறாத கேபிள்களுக்கு அனுமதி பெற்று, அதற்கான வாடகை, நிலுவை வாடகை ஆகியவற்றை காலத்தோடு செலுத்த வேண்டும் என்று தொடர்புடைய நிறுவனங்களிடம் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. மாநகராட்சியின் வலியுறுத்தலுக்கு செவிமடுக்காத நிலையில், அனுமதி இன்றியும், வாடகை செலுத்தாமலும் நிறுவப்பட்டுள்ள கேபிள்களை அகற்றுமாறு மாநகராட்சி நிர்வாகம் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் கேபிள்களை அகற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர்.
ஒரே நாளில் மட்டும் 136 கிமீ நீளத்துக்கு கேபிள்கள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இந்நிறுவனங்கள் அனைத்துக்கும் வாடகை செலுத்தாவிட்டால், அடுத்த மாதமே சேவையை துண்டித்து விடுகின்றன. அதனால் மாதந்தோறும் வாடிக்கையாளர்களிடம் காலத்தோடு கட்டணத்தை வசூலித்து விடுகிறது. ஆனால் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை மட்டும் செலுத்தாமல் இருக்கின்றன. அதனால்தான் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாவிட்டால் மாநகராட்சியின் நடவடிக்கை தொடரும்” என்றனர்.