கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ திட்டம் அறிவிக்கப்பட்ட 1000 மருத்துவ முகாம்களை தாண்டி 1035 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
முன்னதாக, அதே பள்ளியில் வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.12.36 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட 3 ஸ்மார்ட் வகுப்பறைகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது;
பெருநகர சென்னை மாநகராட்சியின் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கும் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் வேர்ல்டு விஷன் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.12,39,906 மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மூன்று ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வகுப்பறைகளில் கல்வி கற்பிக்க ஏதுவாக ஸ்மார்ட் பலகைகளும், மாணவர்கள் அமர்வதற்கான மேஜைகளும் மற்றும் சுவர்களில் அழகிய வர்ணம் தீட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
ஏழை, எளிய மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோய்க்கான சிகிச்சைகளை அளிப்பதற்கான உன்னதத் திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட வருமுன் காப்போம் திட்டத்தினை புதுப்பொலிவுடன் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் என்ற பெயரில் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்கள்.
இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநிலம் முழுவதும் வருடத்திற்கு 1000 வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவித்தார்கள்.
இத்திட்டம் செயல்படத் தொடங்கியவுடன் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சிறப்பான வரவேற்பினை பொறுத்து 1000 என்கின்ற முகாம்கள் 1250 நடத்தப்படும் என அறிவித்தார்கள் இதுநாள்வரை 1035 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு மூன்று வருமுன் காப்போம் திட்டம் முகாம்களும், மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியில் 4 வருமுன் காப்போம் திட்டம் முகாம்களும், சென்னை மாநகராட்சியை பொறுத்த வரையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒன்று என்கின்ற வகையில் 15 மண்டலங்களுக்கு 15 மருத்துவ முகாம்களும் நடத்த திட்டமிடப்பட்டது.
அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் இதுவரை நடைபெற்றுள்ள 1,035 வருமுன் காப்போம் திட்ட முகாம்களில் சுமார் 7,08,031 பங்கு பெற்று பயனடைந்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 14 மருத்துவ முகாம்கள் நடைபெற்று முடிந்து விட்டன.
இன்று நடைபெறுவது 15ஆவது மருத்துவ முகாம். இதுவரை நடைபெற்ற 14 முகாம்களில் 26,330 நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்த மருத்துவ முகாம்களில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு, பெண்கள் நல மருத்துவம், இருதய சிகிச்சை, ஸ்கேன் வசதி, கண் மருத்துவம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு உள்பட 17 வகையான மருத்துவ சிகிச்சை வசதிகள் உள்ளன என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர்கள், வேர்ல்ட் விஷன் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.