விருதுநகர்: விருதுநகரில் 22 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன், மாடசாமி ஆகியோரும், பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். ஜுனத் அகமதுவை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் திமுக மேலிடம் தற்காலிகமாக நீக்கியது. பாதிக்கப்பட்ட பெண், அவரது தாய் ஆகியோர் சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் கவுன்சலிங் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிபிசிஐடி போலீஸார் கடந்த 25-ம் தேதி 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 சிறுவர்கள் உட்பட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை சிபிசிஐடி போலீஸார் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது அவரது மொபைல் போன் பதிவுகள், அதில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் ஹரிஹரன், ஜூனத் அகமது உள்ளிட்டோரின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் 2-ம் நாளாக நேற்றும் சோதனை நடத்தினர்.
போலீஸ் இன்று மனு
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத்அகமது, மாடசாமி, பிரவீன் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் இன்று (மார்ச் 28) மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.