செல்போன் அழைப்புகளில் வரும் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 2020 ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்த தொற்று முதன்முதலாக நாட்டில் பரவத் துவங்கியபோது, மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வினை வழங்க கொரோனோ தொற்று தொடர்பான தகவல்களைக் கொண்ட அறிவிப்புகள், செல்போன் அழைப்புகளில் காலர் ட்யூன்களாக இடம்பெற்று வந்தன. ஒருவரை எவ்வளவு அவசரமாக தொடர்புகொண்டு பேச வேண்டும் என்று அழைத்தாலும், முதலில் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்புதான் காதுகளை எட்டும். அதை முழுமையாக கேட்டபின் நாம் தொடர்பு கொண்டவரிடம் பேச முடியும்.
இந்த காலர் டியூன் அறிவிப்புகள் கொரோனா பற்றிய விழிப்புணர்வை நாட்டு மக்கள் அடைவதில் பெரும் பங்காற்றின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போது கொரோனா 3-வது அலை பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தாமல் முடிவடைய உள்ளது. தொற்று ஏற்பட்டதாலும், தடுப்பூசிகளாலும் பெரும்பான்மை மக்கள் நோய் எதிர்ப்புச்சக்தியை பெற்றுள்ளதால், 4-வது அலை வந்தால் கூட குறிப்பிடத்தக்க அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் செல்போன் அழைப்புகளின்போது ஒலிக்கிற கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பையும், காலர் டியூன்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் மற்றும் மொபைல் போன் சந்தாதாரர்களிடம் இருந்து மத்திய தொலைதொடர்புத்துறைக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. இதையடுத்து இந்த செல்போன் அழைப்புக்கு முந்தைய கொரோனா அறிவிப்பு காலர் டியூன்களை கைவிடுமாறு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு மத்திய தொலைதொடர்புத்துறை கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே செல்போன் அழைப்புகளில் முதலில் வரும் கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பு காலர் டியூன்கள் விரைவில் ரத்தாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM