வெளிநாடு பயணம் வெற்றி – சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசுமுறை பயணமாக கடந்த 24-ம் தேதி மாலை துபாய் சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், அங்கு நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழகத்திற்கான அரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன.
துபாயில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து உரையாடினார். அவரது முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாலையில் அபுதாபியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில், துபாய் மற்றும் அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவர் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், வெளிநாடு பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக வெளிநாட்டினர் பாராட்டு தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.