மும்பை:
இஸ்ரேலில் நடந்த ‘மிஸ் யுனிவர்ஸ் 2021’ போட்டியில் இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்பு 2000-ல் லாரா தத்தா இந்தியாவில் இருந்து தேர்வானார்.
அதன் பின்னர் 21 ஆண்டுகள் கழித்து பஞ்சாபை சேர்ந்த ஹர்னாஸ் சாந்து உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா திரும்பி இருந்த அவரை கவுரவிக்கும் வகையில் கடந்த 17-ந் தேதி அன்று விழா நடந்தது. அதில் நிருபர் ஒருவர் அவரிடம் ஹிஜாப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தவர்கள் அரசியல் கேள்விகள் எதுவும் கேட்காமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். அவரது வாழ்க்கை பயணம் வெற்றி மற்றும் உத்வேகமாக இருந்தவை பற்றி கேளுங்கள் என்றனர்.
ஆனால் அந்த நிருபர் இதே கருத்தை ஹர்னாஸ் சொல்லட்டும் என்றார். உடனே ஹர்னாஸ் சாந்து கூறியதாவது:-
நீங்கள் எப்போதும் ஏன் பெண்களையே குறி வைக்கிறீர்கள்? இப்போது கூட நீங்கள் என்னை குறி வைத்துள்ளீர்கள். ஹிஜாப் பிரச்சினையில் கூட பெண்கள் குறி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் (பெண்கள்) அவர்கள் விரும்பும் வழியில் வாழட்டும். அவர்களின் இலக்கை அடைய விடுங்கள்.பெண்களை பறக்க அனுமதியுங்கள். அவர்களது இறக்கைகளை வெட்ட வேண்டாம். அப்படி வெட்ட வேண்டும் என்றால் உங்கள் இறக்கைகளை வெட்டி கொள்ளுங்கள்.
எனது பயணம், நான் எதிர்கொண்ட தடைகள், அழகி போட்டியில் வெற்றி பெற்றதை பற்றி கேட்டால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு ஹர்னாஸ் சாந்து கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்…மேற்கு வங்கத்தில் இடதுசாரி தொழிற்சங்கத்தினர் ரெயில் மறியல்