புதுடெல்லி: இந்தியாவில் குறைந்த அளவே விமானங்கள் இயக்கப்பட்ட போதிலும் விமானத்தின் மீது பறவைகள் மோதும் விபத்துகள் அதிகரித்து உள்ளதாக ஒன்றிய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. விமானங்களை இயக்கும்போது பறவைகள் மோதினால் விமானங்களுக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், ஒன்றிய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி. கடந்த ஆண்டில் விமானங்களின் மீது 1,466 பறவை மோதல் சம்பவங்களும் (27.25 சதவீதம் அதிகரிப்பு), 29 விலங்குகள் மோதல் சம்பவங்களும் (93.33 சதவீதம் அதிகரிப்பு) நடந்துள்ளன. 2019ம் ஆண்டு 1,227 பறவைகள் மோதல் சம்பவங்களும், 13 விலங்குகள் மோதல் சம்பவங்களும் நடந்துள்ளன. கொரோனா 2வது அலையால் கடந்தாண்டு மே மாதம் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 21 லட்சமாக குறைந்தது. இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘விமான நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் அமைதியாக காணப்பட்டதால் ஏராளமான பறவைகள், நாய் உள்ளிட்ட விலங்குகள் விமான நிலைய பகுதிக்குள் வந்தன. விமான நிலையத்துக்கு அருகே அதிகளவில் குடியிருப்புகள் உருவாகி உள்ளன. குப்பைகள் கொட்டுவதும் அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களாலும் பறவைகள், நாய்கள் விமான நிலைய பகுதிக்குள் வருகின்றன,’’ என்றனர்.