சென்னை: கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களுக்காக ரூ. 352.85 கோடி நிதியுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட மழை வெள்ளப்பாதிப்பு குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதையடுத்து, சாலைகள், வடிக்கால்கள் சீரமைப்பு மற்றும் விவசாயிகளுக்கு முதல்கட்ட நிவாரணம் வழங்குவதற்காக ரூ.300 கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், உதவிகள் வழங்கும் வகையில் மத்தியஅரசிடம் நிவாரண உதவிகள் கோரியிருந்தார்.
அதன்படி, தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதியாக உடனடியாக ரூ.550 கோடியும், மொத்தமாக ரூ.2079 கோடியும் வழங்க வேண்டும் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக, திமுக எம்.பி.டி.ஆர்.பாலு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினார். மேலும் முதல்வர் மார்ச் 1ந்தேதி டெல்லி செல்லும்போது, பிரதமர் உள்பட மத்தியஅமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவார் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக வெள்ள சேதங்களுக்கு ரூ. 352.85 கோடி நிதியுதவி வழங்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறியுள்ளது.