பெங்களூரு: கர்நாடகாவில் திங்கள்கிழமை தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.99% மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதினர் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. ஹிஜாப் தடையை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மாநிலத்தில் பொதுத்தேர்வு நெருங்குவதால் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து “தேர்வுக்கும் ஹிஜாப் அணிவதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இந்த விவகாரத்தை பரபரப்பாக்காதீர்கள்” என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று திங்கள்கிழமை கர்நாடகாவில் 10 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. மாநிலத்தில், சுமார் 8.69 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர்.
மாநில அரசு தேர்வு எழுதவரும் மாணவர்கள் கட்டாயம் சீருடையில்தான் வர வேண்டும்; சீருடை இல்லாமல் வரும் மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்க மாட்டார்கள். தேர்வைத் தவற விடுபவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படாது என்று தெரிவித்திருந்தது. இதுகுறித்த சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கர்நாடகா மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று தொடங்கிய பொதுத்தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து தேர்வெழுத வந்த மாணவிகள், அதனை கழட்டுமாறு அறிவுறுத்தப்பட்டனர். சீருடை அணியாமல் வந்த மாணவி ஒருவர் சீருடை அணிந்து வர கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரும் சீருடை அணிந்து வந்து தனது தேர்வை எழுதினார்.
முதல்நாள் தேர்வு முடிந்ததும் செய்தியாளார்களை சந்தித்த கல்வி அமைச்சர் கூறும்போது, “ஹிஜாப் விவகாரம் சில மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். எங்கள் குழந்தைகளில் 99.99 சதவீதம் பேர் ஹிஜாப் இல்லாமல் தேர்வு எழுதினர். நான்கு மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதாமல் வெளியேறியதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் மாணவிகளா அல்லது தேர்வு நடைமுறைக்கு இடையூறு செய்யவந்த வெளியாட்களா என்பதை உறுதி செய்யவேண்டும்” என்றார்
கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 11-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இன்று மட்டும் 8.48 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். 20,994 பேர் தேர்வெழுத வரவில்லை என மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.