அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த விழாவின் மேடையில் நடந்த சச்சரவு தற்போது வைரலாகி வருகிறது. கிறிஸ் ராக் அமெரிக்காவின் பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியன். சிறந்த ஆவணப்பட விருது வழங்குவதற்காக அழைக்கப்பட்ட கிறிஸ் ராக், மேடையில் அமர்ந்திருந்த பிரபலங்களை மையப்படுத்தி நகைச்சுவையாக பேசத் தொடங்கினார். பேச்சுக்கு இடையில் வில் ஸ்மித் மனைவி Jada Pinkett Smith குறித்து கிறிஸ்-ன் ஜோக் ரசிக்கும் படியாக இல்லை.
GI Jane – ஹாலிவுட் படத்தில் பெண் இராணுவ வீராங்கனையின் தோற்றம் தலைமுடியற்று வடிவமைக்கப்பட்டிருக்கும். வில் ஸ்மித் மனைவி ஜடா alopecia என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கும். இதனை ஒப்பிட்டு கிறிஸ் ராக் பேசியது வில் ஸ்மித்தை கோபப்படச் செய்துள்ளது.
ஜடா GI Jane பார்ட் 2வுக்கு காத்திருப்பதுபோலத் தெரிவதாக கிறிஸ் சொன்னதும் வில் ஸ்மித் மேடையேறிச் சென்று அவரை தாக்குகிறார். அமெரிக்க தொலைக்காட்சி ஒளிபரப்பில் அந்தப் பகுதி mute செய்யப்பட்டது. ஆனால் வெளிநாட்டு ஒளிபரப்பில் அவர்கள் பேசியது கட் செய்யப்படவில்லை.
அதில் வில் ஸ்மித் தாக்கிவிட்டு, “என்னுடைய மனைவியின் பெயரை உன் வாயில் இருந்து சொல்லாதே” என இரு முறை கத்துவது தெரிகிறது. இது ‘GI Jane’ ஜோக் என கிறிஸ் சொல்ல முயல்கிறார்.
விளம்பர இடைவெளியில் வில் ஸ்மித்தை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர். வில் சிமித், கண்ணீர் சிந்துவது போலான வீடியோ ஆடியன்ஸ் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த அரை மணிநேரத்தில் வில் ஸ்மித் மீண்டும் மேடையேறி தனக்கான சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுகிறார். செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தையாக ‘King Richard’ படத்தில் நடித்ததற்காக இந்த விருது வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. விழாவில் இருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித், “இது அழகான தருணம். கலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. நான் கிரேஸியான தந்தையாக காட்சியளிக்கிறேன், ரிச்சர்ட் வில்லியம்ஸ் போல. அன்பு உங்களை கிரேஸியான விஷயங்களை செய்ய வைக்கும்.” என்றார். இந்த நிகழ்வுக்கு பலவிதமான கமென்ட்டுகள் வந்தவண்ணம் உள்ளன.