புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பராமரிப்பு பணி, மேற்பார்வை குழு ஆகியவை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் இருமாநில அரசுகளும் தெரிவித்துள்ளன. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த முறை நடந்த விசாரணையின் போது, ‘முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவில் ஏன் மாற்றங்களை செய்யக் கூடாது?’ என நீதிபிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி, வழக்கறிஞர் குமணன் ஆகியோர், ‘முல்லைப் பெரியாறு அணையை தமிழகம், கேரள மாநில அதிகாரிகள் குழு கடந்த செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்துள்ளது. மேலும், அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணி மற்றும் மேற்பார்வை குழு விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் ஏதேனும் மாற்றங்கள் செய்யலாமா? என்பது குறித்தும் இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. எனவே, இந்த வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்,’ என தெரிவித்தனர். கேரள வழக்கறிஞர்களும் இதையே தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர். மேலும், அன்றைய தினம் இரு மாநிலங்கள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டனர்.