அண்ணாமலை பல்கலை.,யில் தொலைநிலை படிப்பில் சேர வேண்டாம்: யுஜிசி எச்சரிக்கை| Dinamalar

புதுடில்லி: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில், தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொலைநிலை படிப்பை நடத்த, சம்பந்தப்பட்ட பல்கலை தரப்பில், யு.ஜி.சி.,யிடம் அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் பெறாத படிப்புகளை கொண்டு, உயர்கல்வியில் சேர முடியாது. அந்த வகையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் அதனால் மாணவர்கள் அதில் சேர வேண்டாம் என்றும் யு.ஜி.சி அறிவித்துள்ளது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கீகாரமற்ற தொலைநிலை படிப்பு செல்லத்தக்கது அல்ல, என்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு 2014 – 2015 வரை மட்டுமே தொலைநிலை படிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து யு.ஜி.சி செயலர் ரஜனீஷ் ஜெயின் கூறுகையில், ‛சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது. இது, தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல். அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும், ‘ஆன்லைன்’ படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது,’ என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.