சென்னை: போக்குவரத்து அமைச்சராக இருந்து வந்த ராஜகண்ணப்பன் மீது கூறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
போக்குவரத்துதுறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு (மார்ச் 14ந்தேதி) எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,
போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியதாக முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குற்றம்சாட்டியுள்ளார். நீ ஒரு SC BDO தானே என்று பலமுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை இழிவு படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தார்.
இந்த நிலையில், முதலமைச்சரின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார் என கவர்னர் அறிவித்து உள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் முக ஸ்டாலினின் கடநத 9 மாத கால ஆட்சியில், அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதி ரீதியிலான விமர்சிப்பவர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, அமைச்சர் மீது இது நடவடிக்கை எடுக்காதது ஏன், அவரை பதவி நீக்கம் செய்யாதது ஏன் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.