உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றுள்ள ரஷ்ய கோடீஸ்வரர் ரோமன் அப்ரமோவிச்சுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி நடந்ததாக கூறப்படுவது அபத்தமான வாதம். தவறான பிரசாரம் என்று ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர்தான் அப்ரமோவிச். யூதரான இவர் இஸ்ரேலின் 2வது பெரிய கோடீஸ்வரர், ரஷ்யாவின் 11வது பெரிய கோடீஸ்வரர். அதிபர் புடினுக்கு வேண்டியவர். பல்வேறு தொழில்களை நடத்தி வரும் அப்ரமோவிச், செல்சியா கால்பந்துக் கிளப்பின் உரிமையாளரும் ஆவார்.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் இவரும் தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் உக்ரைன் சென்றிருந்தபோது இவருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல ரஷ்ய தரப்பில் முயற்சி நடந்ததாக ஒரு பரபரப்பான தகவல் வெளியானது.
கண்ணெல்லாம் சிவந்து.. தோல் உரிந்து.. புடின் நண்பரை.. விஷம் வைத்துக் கொல்ல முயற்சி!
ஆனால் இன்று துருக்கியில் நடந்த ரஷ்யா – உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையின்போது அப்ரமோவிச் நல்ல ஆரோக்கியத்துடன் கலந்து கொண்டார். அவர் இயல்பாகவும் இருந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டவர் போலவே அவர் இல்லை. இந்தப் பின்னணியில் அப்ரமோவிச்சுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதை ரஷ்யா மறுத்துள்ளது.
இதுகுறித்து கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், இது தவறான பிரசாரம், அவதூறான பிரசாரம். பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் சதி. இது தகவல் போரின் ஒரு பகுதி. இந்த செய்தியில் எதுவுமே உண்மை இல்லை. அப்ரமோவிச், ரஷ்ய சார்பில் கலந்து கொண்டுள்ள அணியில் இடம் பெற்றவர் கிடையாது. அவர் தனக்கு உக்ரைனிலும், ரஷ்யாவிலும் உள்ள தொடர்புகளின் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறார். அவரது பங்களிப்பை ரஷ்யாவும், உக்ரைனும் ஏற்றுக் கொண்டுள்ளன.
மக்கள் ஆதரவுடன் புடின்
அதிபர் விலாடிமிர் புடினுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. மக்களின் பேராதரவை அவர் தொடர்ந்து பெற்று வருகிறார். அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது என்றார் டிமிட்ரி பெஸ்கோவ். ஆனால் போருக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து ரஷ்யாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஜெலன்ஸ்கிக்கு எதிராக.. 25 பேர் கொண்ட கும்பல்.. “குறி” தப்பியது.. பரபரக்கும் உக்ரைன்!
இதற்கிடையே, கீவ் நகரை பிடிப்பதே ரஷ்யாவின் முக்கிய இலக்கு என்று அமெரிக்காவைச் சேர்ந்த போருக்கான கழகம் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது. ரஷ்யாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் நிச்சயம் கீவ் நகரைப் பிடிப்பார்கள் என்றும் அது கூறியுள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யா கவனம் செலுத்தி வந்தாலும் கூட கீவ் நகரம்தான் அவர்களின் முக்கிய இலக்காக உள்ளது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதற்கிடையே, வட மேற்கு கீவ் நகருக்கு அருகில் உள்ள இர்பின் நகரத்தை ரஷ்யப் படைகளிடமிருந்து உக்ரைன் ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளது. கீவ் நகரைச் சுற்றிலும் தற்போது கடும் சண்டை நடந்து வருகிறது. கீவ் நகரை சுற்றி வளைத்திருக்கிறது ரஷ்யா. அதேசமயம், வட கிழக்கில் ரஷ்யப் படையினரின் முன்னேற்றம் தடை பட்டுள்ளது. சுமி, கார்கிவ், செர்னிவ் ஆகிய நகரங்களில் கடந்து 24 மணி நேரத்தில் புதிய தாக்குதல் எதையும் ரஷ்யா மேற்கொள்ளவில்லை.
அடுத்த செய்திஇந்தியாவுக்கான பயண கட்டுப்பாடுகள் நீக்கம் – அமெரிக்கா அதிரடி!