Muthukulathur BDO caste allegations against Minister RajaKannappan: முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை சொல்லி ஒருமையில் பேசியதாக, அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் எழுந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (பிடிஓ) பணிபுரிபவர் ராஜேந்திரன். இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.03.2022) போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சிவகங்கையில் உள்ள அவரது வீட்டிற்கு வர சொல்லியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிடிஓ ராஜேந்திரன், மற்றும் கிராம ஊராட்சிக்கான பிடிஓ அன்புகண்ணன் ஆகியோர் அமைச்சர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ராஜேந்திரனை பார்த்து “நீ SC (தாழ்த்தப்பட்ட சமூகம்) BDO தானே? நீ சேர்மன் (அதிமுக) பேச்சைக்கேட்டுக் கொண்டு தான் நடப்பாய், நாங்கள் சொல்வதை கேட்பது இல்லை உன்னை AD கிட்ட சொல்லி உடனே தூக்கி அடிக்கிறேன்” என்று ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், மார்ச் 28 காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கச்சென்ற முதுகுளத்தூர் பிடிஓ ராஜேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியதாக வந்த தகவலின் பேரில் சிவகங்கையில் உள்ள அவரது வீட்டிற்கு நானும், அன்பு கண்ணன் அவர்களும் சென்றோம். வீட்டிற்கு உள்ளே நுழைந்தவுடன் என்னை ஒருமையில் பேசியதோடு “நீ எஸ்.சி. பிடிஓ தானே?” என்று முகம் சுழிக்க வைக்கும் வகையில் கேள்வி எழுப்பினார். வேண்டுமென்றே தன்னை அதிமுகவுக்கு ஆதரவானவர் போல் சித்தரித்து பேசிய அவர் மீண்டும் மீண்டும் 6 முறை எஸ்.சி பிடிஓ என்ற கூறினார். மேலும், உன்னை உடனடியாக வேறு இடத்திற்கு தூக்கி அடிக்கிறேன் என்றும் மிரட்டினார்.
இதனால், நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்து வந்தேன். நடந்ததை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்தேன். அமைச்சர் வீட்டில் நடந்தவை அனைத்தையும் நான் உடன் எடுத்துச்சென்ற இந்த டைரியில் எழுதி வைத்துள்ளேன் என தழுதழுத்த குரலில் பேசினார். மேலும், சம்பவம் குறித்து மத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளிக்க முகவரி கேட்டுப்பெற்றதோடு அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன், அவர்கள் பேக்ஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஆவணங்களை அனுப்புமாறு கூறியுள்ளனர் என்றும் ராஜேந்திரன் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழ்நாடு போக்குவரத்துத் துறை துணை ஆணையர் நடராஜனின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி ரூ.35 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் மற்றும் சம்பந்தப்பட்ட துணை ஆணையர் நடராஜன் திருநெல்வேலிக்கு மாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சாதி ரீதியான பிரச்சனையில் சிக்கியுள்ளதால் அவரது அமைச்சர் பதவி பறிபோகும் சூழல் உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், சமூகநீதி மக்களுக்குக்கான பாடம்தானா… மந்திரிக்கு இல்லையா? அரசு அதிகாரியை சாதி குறிப்பிட்டு திட்டிய மந்திரி ராஜ கண்ணப்பன் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணி செய்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) ராஜேந்திரன் அவர்களை, போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.ராஜகண்ணப்பன் பட்டியல் இனத்தவன் என்று பலமுறை கூறி, அவர்மீது சாதிய ரீதியிலான தாக்குதலும், பல முறை அவரை ஒருமையில் பேசி அதிகாரத்தை துஷ்பிரயோகமும் செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
அதிமுகவின் சேர்மன் பேச்சைத்தான் அவர் கேட்பார் என்றும், அமைச்சர் சொல்வதை அவர் கேட்பதில்லை என்று சொல்லி ‘‘நீ SC BDO தானே’’ என்றும், ‘‘உன்ன இன்னைக்கே வேற இடத்துக்கு தூக்கி அடிக்கிறேன்’’ என்று தன் சாதிய வெறியையும்,அதிகார பலத்தையும் காட்டியுள்ளதாக ராஜேந்திரன் அவர்கள் புகார் சொல்கிறார்.
இதையும் படியுங்கள்: அண்ணாமலை பல்கலை. தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை; மாணவர்கள் சேர வேண்டாம்; UGC எச்சரிக்கை
அதோடு இல்லாமல் ‘‘தமிழ்நாடு முழுக்க இனிமே நாங்கதான் வேற எவனும் வர முடியாது’’ என்று பேசியதாகவும் சொல்லி இருக்கிறார். இது தமிழ்நாடு முழுக்க இனி திமுகதான் என்கிற ஆணவ பேச்சா அல்லது சாதிய ரீதியிலான அகந்தைப்பேச்சா என்று தெரியவில்லை.
ஒரு பக்கம் சமூக நீதி காக்க முதலமைச்சர் ஸ்டாலின் குழு அமைக்கிறார். சாதி மதம் கடந்தது எங்கள் திராவிட மாடல் என்று பெருமையாக பேசுகிறார். ஆனால் அவர் அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் மீது சாதிய ரீதியான புகார் வந்துள்ளது வெட்கக்கேடானது.
இதுகுறித்து உடனடியாக விசாரித்து, இது உண்மை எனும் பட்சத்தில் போக்குவரத்துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதுவே சமூகநீதியை காப்பதாய் முதல்வர் கூறும் செய்தியை உண்மையாக்கும் என்று மக்கள் நீதி மய்யம் கருதுகிறது.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ‘ என்ற கலைஞருக்கு பிடித்த வள்ளுவனின் வரிகளை முதல்வருக்கு நினைவூட்ட விரும்புகிறது மக்கள் நீதி மய்யம். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.