தமிழக அமைச்சர்கள், முதல்வர் மீது தொடர்ந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “முதல்வர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போவுக்கு சென்றதைப் பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்காக, 24 மணி நேரத்துக்குள் அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ரூ.100 கோடி நஷ்ட ஈடாக முதல்வர் நிவாரண நிதிக்கு 2 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும். இதைச் செய்யத் தவறினால், சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்” எனக் குறிப்பிடப்பட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

அதையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு தி.மு.க, என் மீது மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன். அ.தி.மு.க அமைச்சர்களிடம் மிரட்டி பணம் பெற்றதாக தி.மு.க நிர்வாகிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தி.மு.க-வுக்குத் தெம்பு, திராணி இருந்தால் தக்க ஆதாரத்தைக் கொடுத்து என்னைக் கைது செய்யுங்கள். நான் அடுத்த ஆறு மணி நேரம் பா.ஜ.க அலுவலகத்தில் தான் இருப்பேன். நீங்கள் என்னைக் கைது செய்யாவிட்டால், தமிழக மக்கள் இனி நீங்கள் சொல்வதைத் இன்றிலிருந்து ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பொறுப்புடன் பேச வேண்டும். தி.மு.க தலைவர் குறித்து அவதூறாகப் பேசியதற்காகத்தான் தான் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எல்லா வழக்கிலும் கைது செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. தி.மு.க-வை குற்றம்சாட்டினால் பா.ஜ.க-வில் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் பேசுகிறார் அண்ணாமலை. அவர் எப்படி போலீஸ் ஆனாரோ தெரியவில்லை.
புகார் அளித்தால், விசாரணைக்குப் பின்னர் தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக முடிந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அரசியல் பக்குவம் இல்லாமல் பேசி வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.