மாஸ்கோ:போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில்,’உக்ரைனியர்களை நான் அழித்துவிடுவேன் எனக் கூறுங்கள்’ என்று ரஷ்ய அதிபர் புதின் கோபமாகக் கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதில் ரஷ்ய தொழிலதிபரான ரோமன் அப்ரமோவிச்சின் உதவியை உக்ரைன் நாடியது. உக்ரைனின் வேண்டுகோளை ஏற்று ரஷ்ய அதிபர் புதினுடன் ரோமன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் ரோமனிடம் அதிபர் புதின் , ”நான் அவர்களை அழித்துவிடுவேன் என்று அவர்களிடம் கூறுங்கள்” என்று கோபமாகக் கூறியுள்ளார் என்று பிரிட்டிஷ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையின் தற்போதைய நோக்கம் போர் நிறுத்தம் மட்டும்தான் என்று உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஒரு மாதமாக நடக்கும் போர் காரணமாக ரஷ்யா மீது எம்மக்களுக்கு வெறுப்பை விதைக்கிறீர்கள் என்று ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா நடந்தும் போர் காரணமாக, உக்ரைனிலிருந்து 40 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர். அவர்களில் 90% பேர் பெண்கள், குழந்தைகள். இதுதவிர 60 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வாழ்விடத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா.வுக்கான அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. போரில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.