கடப்பா: இரண்டாம் நூற்றாண்டில் ரோமானிய பயணி டாலமி என்பவர் திருப்பதியை அடுத்துள்ள ஊருக்குவந்தார். அவர் இந்த ஊருக்கு ‘கரிபே-கரிகே’ என பெயர் சூட்டினார். இதுவே மருவி ‘கடப்பா’ வாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்த ஊரில் இருக்கும் லட்சுமி பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
‘தேவுண்ணி கடப்பா’ என்றபகுதியில் கோயில் அமைந்துள்ளது. தேவுண்ணி கடப்பா என்றால் கடவுளின் வாசற்படி என்று பொருளாகும்.
இக்கோயிலில் மூலவர்வெங்கடேஸ்வரரும் அவரின்இடது பக்கம் தனிச் சன்னிதியில் மகாலட்சுமியும் குடி கொண்டுள்ளனர். இக்கோயிலுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் மட்டி ராஜுலு, விஜயநகர அரசர்கள், நந்தியாலா அரசர்கள் திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி அன்றுஇங்குள்ள பெருமாளை, முஸ்லிம்கள் குடும்பத்தினருடன் வழிபடுவதுதான் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். ரதசப்தமி தினத்தன்று திரளான முஸ்லிம் பக்தர்கள் பங்கேற்று சுவாமியின் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன்களையும் செலுத்துகின்றனர்.
இதுகுறித்து முஸ்லிம்கள் கூறும்போது, ‘‘ஏழுமலையானின் மனைவியாக இதிகாசங்களில் கூறப்படும் பீபீ நாச்சாரம்மா எங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஏழுமலையான் எங்களுக்கு உறவினர் ஆவார். இதனால் நாங்கள் ஏழுமலையானை வழிபடுகிறோம். மேலும், எங்களின் வீடுகளில் பிறக்கும் மூத்தவர் ஆண்டிற்கு ஒரு முறையாவது இவரை வழிபட்டே ஆக வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
வரும் ஏப்ரல் 2-ம் தேதி உகாதி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முஸ்லிம்கள் ஏராளமானோர் பெருமாளைவழிபடுவதை நாம் காணலாம். ஆந்திராவில் உள்ள ‘தேவுண்ணி கடப்பா’ லட்சுமி வெங்கடேஸ்வரர் கோயில் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது’’ என்றார்.