சென்னை:
தமிழகத்தில் போதை பொருட்களை முழுமையாக ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர், ஜனவரி மாதங்களில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் ‘ஆபரேஷன் கஞ்சாவேட்டை 2.0’ என்ற பெயரில் இன்று முதல் ஒரு மாதம் கஞ்சா வேட்டைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், ஐ.ஜி.க்கள். டி.ஐ.ஜி.க்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
கடந்த டிசம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக இந்த மாதம் 28.03.2022 முதல் 27.04.2022 வரை ஒரு மாதம் ‘ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தப்பட வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்காணும் நடவடிக்கைகளை இம்முறையும் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும்.
கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
கஞ்சா மற்றும் குட்கா கடத்தல், பதுக்கல் விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல் விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கஞ்சா, குட்கா பழக்கத்துக்கு அடிமையான மாணவர்களை மனநல ஆலோசகரிடம் அனுப்பி அவர்களை இப்பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு காவல் நிலைய ஆய்வாளர் வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி ரகசிய தகவல் சேகரிக்க வேண்டும்.
ஆந்திர மாநில கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர போலீசாருடன் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதைத்தடுப்பு பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.
ரெயில்வே காவல் துறையினர், ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பை அளிக்க வேண்டும்.
பார்சல் மற்றும் மாத்திரை போதை மருந்துகள் விற்பனை செய்பவர்களை கண்காணிக்க தனிப்படை அமைத்து கண்காணித்து கைது செய்ய வேண்டும்.
இந்த பணியினை கூடுதல் காவல் இயக்குனர், சட்டம்- ஒழுங்கு தினமும் கண்காணித்து மாநில காவல் கட்டுப்பாட்டு அறையின் அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
சென்னை மாநகர, ஆவடி மாநகர, தாம்பரம் மாநகர காவல் ஆணையர்கள் நேரடியாக இந்த பணியில் கவனம் செலுத்தி தங்கள் அறிக்கையை அனுப்புதல் வேண்டும்.