கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்க ராணுவம் வெளியேறியதையடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பல்வேறு சவால்களை ஆப்கனிஸ்தான் சந்தித்து வருகிறது. அதிலும், பெண்களுக்கு எதிராக தாலிபன்கள் விதித்துவரும் நிபந்தனைகளால் ஆப்கனிஸ்தான் மக்கள் தாலிபன்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட தாலிபன்கள், பள்ளிகளில் மாணவிகளை அனுமதிக்காததற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐ.நா குரல்கொடுத்து வருகிறது. மேலும், பெண்கள் விமானத்தில் தனியாக பயணிக்கவும் தாலிபன் அரசு தடைவிதித்திருக்கிறது.
இந்த நிலையில், தாலிபன் நிர்வாகத்தின் பொது அறநெறி அமைச்சகம், அரசு அலுவலகங்களுக்கு நேற்று ரோந்து சென்றுள்ளது. அதையடுத்து, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு சிகையலங்காரம், ஆடைக்கட்டுப்பாடு போன்றவற்றில் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, அரசு ஊழியர்கள் தளர்வான ஆடைகள் மற்றும் தொப்பி அல்லது தலைப்பாகை கொண்ட உள்ளூர் ஆடைகளை அணியுமாறும், தாடியை எடுக்கக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இதனை மீறி தாடி எடுத்தால் அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்றத் தவறினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தாலிபன் அரசு எச்சரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.